உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

புதன், 29 செப்டம்பர், 2010

போரியலைக் கற்றுக் கொடுத்த கோழி

தமிழீழம் தனிநாடு வேண்டி போராடிக் கொண்டிருக்கின்ற நிலம். கிழக்கு வடக்கு அதனுடன் இணைந்த நிலப்பரப்புகள். வன்னி நிலம் வடக்கோடும் கிழக்கோடும் அமைகின்றது. வடக்குப் புறத்தில் குடாநாடு. யாழ் குடாநாடு சுற்றிவர அரச படைனர் சூழ்ந்திருந்தகாலம். நீளேவுகணைகளின் அச்சம் மட்டுமன்றி போரூர்திகளின் குண்டுவீச்சும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தநிலம்.யாழ் வரவில் இருந்து கிட்டத்தட்ட நான்கு (கி.மீ) நெடுஞ்சாலை வரை அமைந்துள்ள ஊரான அரியாலையில் தான் நடந்த நிகழ்வு.

(காக்கையிடமிருந்து குஞ்சை மீட்டது பற்றி முன் பக்கத்தில் கூறப்பட்டது).காக்கையிட மிருந்து குஞ்சை மீட்டு பரிவோடு வளர்ப்பதைக் கண்ட பூர்னாம்பிச் சித்தி தன்னிடம் நின்ற கோழிக்குஞ்சிகளில் ஒன்றை வளர்க்கத் தந்தார். அது பேட்டுக் குஞ்சு பஞ்சுபோல் மேனி. அதை சித்தியிடமிருந்து வாங்கி வந்து வளர்த்தோம். அதுவும் வளர்ந்து பேடானது. கன்னிக்கோழி கேரும் போது என்ன அழகு! அது முட்டையும் இடத்தொடங்கியது.ஆனால் அம்மை எங்களுக்குத் தருவதில்லை அவற்றை அடைகாக்க சேமித்தார். அவ்வெள்ளைக் கோழியும் அடைக்காக்கும் பருவமானது. கிட்டத்தட்ட பத்து முட்டைகள். வீட்டுக்குப் பக்கத்தில் பத்தியுள்ளது. பத்திக்குள்ளேயே அடைகாத்தது. அடைகாத்து சில நாள்களில் குஞ்சுகளும் பொரித்தது வெளியே வந்தன. எல்லா குஞ்சுகளும் பொரித்தன. எங்களுக்கு பருந்து,காக்கை,வல்லூறு என்று சில பறவைகளிடமிருந்து காக்கவேண்டிய பொறுப்பும் இருந்தது. கரப்பைத் துறந்து விட்டு கன்ணுக்குள் எண்ணெய் வார்த்தது போல் நிற்க வேண்டும்.

இப்படித்தான் ஒருநாள் தாய்க் கோழியும் குஞ்சுகளும் இரைகளைத் தேடி வேலியோரமாக பக்கத்து வீட்டுக் கோடிக்குள் நின்றன. திடீரென பரபரப்பு காக்கை குஞ்சை தூக்கப் பார்த்து பறந்ததைக் கண்ட தாய்க் கோழி காக்கையைத் துரத்துக் கொண்டு பறந்தது. கோழி பறக்காதென்பர் என் வீட்டு வெள்ளைக் கோழி பறந்தது. காக்கை குஞ்சைத் தூக்கி விட்டதோ என்று பதறிக்கொண்டு ஓடிப் போய் குஞ்சுகளைத் தேடினேன். என் கண்ணுக்குத் தெரியவில்லை. காகத்தைத் துரத்திய இறுமாப்பில் செட்டைகளையும் விரித்துக்கொண்டு குஞ்சுகளிடம் வந்தது. அந்தக் கோழியின் அழகு எதிரிகளின் பாசறைகளை தகர்த்தெறிந்து விட்டு பெண்புலிகள் மிடுக்காய் நடந்து வருவார்களே! அதைபோலத் தான். தாய்க்கோழியைக் கண்ட குஞ்சுகள் புற்களிலிருந்து வெளியே வந்தன. என்ன வியப்பு இவற்றுக்குப் போரியலைக் கற்றுக்கொடுத்தது யார்? எப்படி போரியலைக் கற்றுக் கொண்டன?

சூழலுக்கேற்ப தங்களைத் திறம்படுத்திக் கொண்டால் நீண்ட இடரைத் தடுக்கலாம்.

_ச.உதயன்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

காக்கை தூக்கிய கோழிக்குஞ்சு!

ஒரு நாள் பெருத்த கூச்சல். காக்கையொன்று அயல் வீட்டு கோழிக்குஞ்சை தூக்கிற்று. குஞ்சோ கீச்...கீச்...கீச் என்று கத்தும் ஒலி எங்கள் எல்லோரையும் பரபரக்கச் செய்தது. அந்தக் காக்கை எங்கள் வீட்டின் வழியாகப் பறந்து வந்து பூவரசு மரத்தில் இருந்து வாயில் இருந்த குஞ்சைத் தின்பதற்கு அணியமானது. குஞ்சோ கத்தியது; தம்பி எனக்கு இளையன் விட்டானா காக்கையை விடவில்லை. குஞ்சை காக்கையிடமிருந்து மீட்டுவிட்டான். குஞ்சை மீட்டதும் உரிய வீட்டாரிடம் கொடுத்தான். "காக்கை கொன்று தின்றிருக்கும் காப்பாற்றிய உங்களிடமே குஞ்சு இருக்கட்டும்" என்று கொடுத்துவிட்டனர்.

அவனும் அதை அன்போடு வீட்டுக்குக் கொண்டுவந்தான். அவனோடு தான் அந்தக் குஞ்சு வளர்ந்தது.விடலை பருவம் அடைந்தது. கூவவும் தொடங்கிற்று. "நான் காப்பாற்றிய குஞ்சு விடலைச் சேவலாய் கூவுகிறது" என்று கூறி மகிழ்வான் தம்பி. அந்தச் சேவல் குஞ்சாய் இருக்கும் போது தாய்க்கோழியின் சூட்டை அறிந்ததில்லை. தம்பியின் கைச்சூடுதான் அதற்குத் தெரியும். யானும் தங்கையும் சேர்ந்து அக்குஞ்சுக்குப் பரிவுகாட்டி வந்தோம். அதனால் நாங்கள் கையை அதனருகில் கொண்டுசென்றால் அது இருந்து விடும். நாமும் பிடித்து கன்னத்தில் வைத்து கொஞ்டுவோம்.விடலைச் சேவலுக்குரிய அத்தனை அழகும் கொண்டது.
வளர்த்த தம்பியும் தாயக விடிவுக்காய் தன்னை இயக்கத்துக்கு ஒப்படைத்து விட்டான். அவன் விடுமுறைக்குத் தான் வருவான். அவன் இலக்கு முழுவதும் விடிவென்றே இருந்தது.

நிற்க,
வளர்ந்த விடலைச் சேவலை கறியாக்க அப்பாவுக்கு விருப்பமில்லை நாம் அந்த சேவல் மேல் வைத்த பரிவைக் கண்டிருந்தார்.ஆனால் அதை யாருக்கோ விற்க முடிவுசெய்தார். சேவலைப் பிடித்துத் தரும்படி என்னிடம் கேட்டார். நான் பிடித்துக் கொடுக்க மறுத்துவிட்டேன். தங்கைக் கேட்டு பிடித்துக் கொண்டுபோனார். தங்கைக்கு அறியா அகவை அன்றிலிருந்து அப்பாமேல் சிறிய முரண்பாடு. அச்சேவலை தெரிந்த நண்பருக்குக் கொடுத்து அவர் அதை கறியாக்கி உண்டதை சுவைபடச் சொன்னார். நானோ அந்த சேவலை நினைத்து மனம் வேகினேன்.

வீட்டுப் பிள்ளைகள் போல் வளர்க்கும் உயிரினங்களைக் கொல்லாதீர். பரிவு காட்டாவிட்டாலும் தீங்கு செய்யாமல் இருப்பீர்.

_ச.உதயன்.

சனி, 25 செப்டம்பர், 2010

காயத்திரி

மங்காத் தமிழரை
மாற்றார் கொல்ல
வங்கம் முழுதும்
அரத்தம் சொரிய
எங்கோ புலத்தில்
ஏங்கிக் கிடந்தோம்
எங்கள் உறவே
எமக்காய் அழுதீரே!

ஐயாஐயா
முத்துக் குமரா
அகத்தில் கொண்ட
தமிழர் பற்றால்
சிதையினை யுடலில்
சினத்துடன் மூட்டினீரோ!

மூத்த குடி
வாழ்ந்தநாட்டில்
மூஉ வேந்தர்
ஆண்ட நாட்டில்
முத்தமிழை வளர்த்த
முதுதமிழ் நாட்டில்
முத்துக் குமரன்
செத்துக் கிடந்தாரோ!

ஈழதம் முறவுக்காய்
தன்னுடலில் மட்டுமல்ல
எல்லோர் நெஞ்சிலும்
மூட்டிய நெருப்பு
ஈழநாட்டில் தமிழீழம்
காணுமரை அணையுமோ!

_ச.உதயன்.

மலையும் மடுவும்

ச.உதயன்:)

தமிழ் நலங்காக்கும் முனைவர் அவர்களுக்கு,
நாங்கள் ஏதோ இருக்கிறோம். உங்கள் நலம் எப்படி ஐயா? தமிழ் நலமும்
தங்களோடல்லவா இருக்கிறது. உச்சந்தலையில் பனிக்கட்டி வைக்கவில்லை. பாவாணர்
வழி வந்த பேராளர் அல்லவா! உங்கள் தமிழ் நூல்கள் சிலவற்றை வாசித்து
பூரித்திருகிறேன். பாவாணரின் பைந்தமிழை நோர்வேயில் பறைசாற்றி வருகிறேன்.
உங்கள் துணையும் கிட்டிவிட்டால் இலக்கில் வெற்றி கிட்டும்.தயவு செய்து
மின்மடலோடு தொடுப்பில் இணைவீர்களா?
நன்றியுள்ள மாணவன்.
ச.உதயன்.

முனைவர் அரசேந்திரன்:)

அன்புள்ள தம்பி வணக்கம்.


தங்கள் கடிதத்திற்கு நன்றி.நெடுநாட்களாகத் தங்கள் கடிதத்தைக் காணமால் இருந்துவிட்டேன்.நீங்கள் மலேசியாவில் என்னைச் சந்தித்தீர்களா? என் மின்னஞசல் முகவரி அப்பொழுது கொடுத்தேனா .என் நூல்களில் உலகம் பரவிய தமிழின் வேர்- கல் பகுதி நான்கும் தங்களிடம் உள்ளதா? மிகவும் முதன்மையான நூல்கள் இவை. தமிழறிவோம் தமிழறிவோம் பகுதி 1 மற்றும் 2 தமிழ்க்கப்பல் என்பனவும் குறிப்பிடத்தக்கன. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் ஆய்ந்து கொடுத்துள்ள தமிழ் வடஇந்திய மொழிகள் பகுதி௧ ஓர் ஆய்வுச்சிகரமாகும். இன்னும் இது நூலாக அச்சில் வெளிவரவில்லை. இதுவரை செய்தவற்றினுள் இன்னும் பல மடங்கு நூல்கள் வெளிவரவேண்டும். தமிழால் தழைத்த சிங்களம் நூல் அண்ணாவால் வழிகாட்டப்பட்டு எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் நூல். ஆயிரம் ஆயிரம் கனவுகளும் கடந்த ஓராண்டாக நொறுங்கிக் கிடக்கின்றன. காலம் மாறினால்தான் நம் பணிகளை நிறைவுடன் செய்யமுடியும். தங்களைப் போன்ற தம்பிகளின் நல்அன்பு சிறிது ஊக்கத்தை எனக்குத்தருகின்றது. என் நூல்களைக் கற்று அவற்றில் காணப்படும் தமிழின் சிறப்பை தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

ச.உதயன்:)

முனைவர் அரசேந்திரன் ஐயாவுக்கு,
யான் மீண்டும் அன்புவணக்கத்தை மிடுக்கோடு தெரிவிக்கிறேன். ஏனெனில் நுங்கள் தொடர்பு கிடைக்குமா கிடைக்குமா என்று இவ்வளவு நாளும் ஏங்கிக்கிடந்தேன் இன்று அக்குறை தீர்ந்தது. இன்று என்மகன் பாவலன் பிறந்தநாள். அகவை ஏழு இன்று நிரம்பியது. இந்நாளில் உங்கள் மின்மடலும் கிடைத்தது. எவ்வளவு மகிழ்வு தெரியுமா!
ஐயாவோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டது ஆனால் தொடர்ந்து தொடுப்பில் இருப்பீர்களா? பாவாணர் ஆய்வு நூல்களுக்குப் பின் உங்கள் ஆய்வு நூல்கள் அவருடைய சறுகல் நிலையை நிமித்துவதை உவப்போடு வாசித்திருக்கிறேன். எத்தனை நூல்கள் எழுதினாலும் அத்தனை நூல்களும் எனக்கு வேண்டும். அத்தோடு நோர்வே(நார்வே) நாட்டு மொழிப் பலுக்கலும் சொற்களும் தமிழுக்கு நகலாக உள்ளன நோர்வே நாட்டு மொழியையும் ஆய்வு செய்து தமிழின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றவேண்டும். அதை உங்களால் தான் முடியும். நூல்களை நீங்கள் எழுதுங்கள் நூல்களுக்கான படிகளைத் தந்து நூல்களை வெளியிடுவோம். உங்களுக்கு உறுதிமொழி வழங்குகிறேன். நோர்வேயில் இயங்கி வரும் ஒலிவிளம்பியான தமிழ்முரசத்தில் 'நாற்றுமேடை' என்ற நிகழ்ச்சியை நடாத்தி வருகிறேன். பாவாணர் நூல்களும் அரசேந்திரனாகிய உங்கள் நூல்களுமே கருவிநூல்களாக உள்ளன.
தமிழறிவோம்
தமிழறிவோம் தொகுதி 2
தமிழ்க்கப்பல்
இன்னும் நீங்கள் யாத்த கட்டுரை நூல்கள் வேண்டும். அவற்றை எப்படிப் பெறுவதென்று அறியத் தாருங்கள் ஐயா. உடனே அவற்றுக்கான படிகளை அனுப்பிவைக்கிறேன்.
உங்கள் தொடர்புக்காய் ஏங்கிகிடந்த போது மலைய நண்பர் தாம் தந்தார்.நிறைந்தது சிந்தை.
நன்றியன்பன்,
மாணவன்.
ச.உதயன்
(தாயம் தமிழீழம் வாழிடம் நோர்வே)

வாழ்க தமி வளர்க தமிழர் வாழிய வாழிய தமிழ்நாடும் தமிழீழமும்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பொள்ளாச்சிக்காய் கொச்சகக் கலி

ஆட்சியோ பொள்ளாச்சி வாட்டமோ அண்டாது;
கூட்டமோ தெங்குபோல் தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ ப‌த்திமுத்தி விட்டிலைப் பேணும‌ந்த‌;
பாட்டாளி ம‌ண்ணைநீயிர் பாருங்காள் ந‌ண்ப‌ரே"

நன்றியன்பன் _ச.உதயன்.


ச.உதயன்:)
வசிட்டரே குட்டித் திருத்த வேண்டுகிறேன். இப்பாடல் சரியா? பிழையா?

இராஜ. தியாகராஜன்:)
நண்பரே! நான் வசிட்டனோ, நீங்கள் கௌசிகனோ அல்ல. பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம்தான். உங்கள் பா எவ்வகையான கட்டமைப்பு என்று கூறுங்கள். பின்னர் அதிலிருக்கும் அமைப்பினை சரிபார்த்துச் சொல்கிறேன். மற்றபடி பொதுவாக வெண்கலிப்பா/கலிவெண்பா எனில் ஈற்றடி சிந்தடியாக வரவேண்டும். இது எல்லாமே அளவடிகளால் வந்தது.

கொச்சகக் கலிப்பா என்று கொள்ளலாம்.:

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டாது வாட்டமும்;
கூட்டமோ தெங்குபோல்; தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைப் பேணுமந்த,
பாட்டாளி மண்ணையே பாருங்காள் நண்பரே!

மாற்றங்களின் விவரம்:
ஆட்சி - அண்டா = பொழிப்பு மோனைத் தொடைக்காக
மண்ணைநீயிர் = முதலில் எனக்கு அதன் பொருள் வேண்டும். இரண்டாவது கலிப்பாவிலோ/ வெண்பாவிலோ விளாங்காய் சீர்களை இலக்கியங்களில் காணமுடியவில்லை ஓசைநயம் கெடுகின்றதென்பதால். விளாங்காய்சீர் = காய்ச்சீர்களில் நடுவில் குறில்+நெடில் இணைந்த நிரையசை வருதல். திருப்புகழ் போன்றவைகளில் கடைசியில் வரும் தொங்கல்களில் மட்டும் பார்க்கிறேன்.

ச.உதயன் :)நீங்கள் திருத்திய படியே தான் பாடல் அமைய வேண்டும்.நீங்கள் திருத்தியது மிகச்சரியே.மேலும் திருத்தலாமா "விட்டிலைக் காக்குமந்த" என்று திருத்தினால் சரியாகுமா?
எனக்கு பாவகை இன்னும் புரியவில்லை. பொள்ளாச்சி மண்ணைக் கேள்வியுற்ற வரை எழுதினேன்.ஆசானின் மறுமொழி மடலுக்கு நன்றி.மண்ணை நீயிர் என்றே எண்ணியெழுதினேன்.
மீண்டும் பாடலைத் தந்தேன்.சரியெனில் அதை பொள்ளாச்சி மண்ணுக்காய் வைத்துக்கொள்வேன்.

பொருளாச்சி(பொள்ளாச்சி) மண்ணுக்காய்.

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டாதே வாட்டமும்;
கூட்டமோ தெங்குபோல்; தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைக் காக்குமந்த,
பாட்டாளி மண்ணையே பாருங்காள் நண்பரே!

இராஜ. தியாகராஜன்:)நண்பரே உங்கள் கருத்து சரியே! இனி கலிப்பாவின் துள்ளல் ஓசை நயத்துக்காய், ( என்னால் தெங்குபோல், பத்திமுத்தி என்ற சொற்களை மாற்ற இயலவில்லை - பொருள் நயம் கெடுமோ என்ற அச்சம்)

முதலடி - கூவிளம்+தேமாங்காய்+கூவிளம்+கூவிளம்

இதைப்போல் அனைத்து அடிகளும் அமைந்தால் இயல்தரவிணை கொச்சகக் கலிப்பா.

இல்லாவிடில் கொச்சகக் கலிப்பா.
சில விவரங்கள் நேரீற்றியற் சீரும் (நேர் ஈற்று இயற்சீர்) (தேமா, புளிமா எனும் மாச்சீர்கள்) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி எனும் சீர்கள்) கலிப்பாவில் வாரா. இவையொழிந்த எல்லாச் சீர்களும் கலிப்பாவில் வரும். கலித்தளையுடன் பிற தளைகளும் கலிப்பாவில் மயங்கி வரும்.

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டுமோ வாட்டமும்
கூட்டமோ தெங்குபோல் தோப்பென கூடியே
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைக் காத்திடும்
பாட்டாளி மண்ணுக்காய் பாருங்கள் நண்பரே

(பாடல் வளமாகத் திருத்தியவர் ஆசான் இராஜ.தியாகராஜன்).
_ச.உதயன்

புதன், 22 செப்டம்பர், 2010

புதிய பாதை

தமிழ்மொழி காப்போம்
வாரீர் - தூய‌
தமிழாலே செய்யுள்கள்
யாப்போம் வாரீர்
தமிழ்க்குடி காப்போம்
வாரீர் - ஏழை
தள்ளாடும் போதிலே
தாங்குவோம் வாரீர்
குழந்தைக்கும் மரபினைச்
சொல்லி - நல்ல‌
குமுகத்தை ஆக்குவோம்
தோழர்காள் வாரீர்

மறைமலை சொன்னது
போலே - மேன்மை
மறைகளைக் கற்றுநீம்
மொழியாக்க வாரீர்
ஐரோப்பா முன்றலில்
நின்று - (அப்துல்கலாம்)
ஐயனின் நாவைப்போல்
நவிலுவோம் வாரீர்
உலகெல்லாம் திரிவோமே
வாரீர் - வெகுவாய்
ஊர்களை உருவாக்க‌
ஒன்றாவோம் வாரீர்

வள்ளுவர் ஔவையைப்
போலே - சந்தப்
பள்ளுவால் பாவாக்க‌
தம்பியர் வாரீர்
பேதமை கொள்ளவும்
வேண்டா - கொலைப்
பேய்களைப் போலே
ஆகவும் வேண்டா
ஆய்தப் போர்களும்
வேண்டா - அன்பாய்
ஆய்வுகள் செய்து
அறங்காக்க வாரீர்.
_ச.உதயன்

புதன், 15 செப்டம்பர், 2010

செல்வமன்றோ!

வறுமையில் பிறப்பதும் குற்றமல்ல
வறுமையில் துடிப்பதும் குற்றமல்ல
பொறுப்புடன் வளரனும் தம்பியரே
சிறப்புடன் இறப்பதே செல்வமன்றோ!

சனி, 11 செப்டம்பர், 2010

முகநூல் மின்மடலூடாக....

ச.உதயன்:)
"அருமை வரிதந்த பேரா. தியாக
இராய ரெனும்நற் றமிழ்தா யுவக்கு
முரைநடை வேந்தே! முகநூலு முன்னால்
நிறைந்தநல் காவிரி யாறு."

இராஜ.தியாகராஜன்:)அரு-இரா அடியெதுகையாகா. (முதற்சொல் ஓரினம்-குறில், ஆனால் இரண்டாம் சொல் ரு-ரா ஓரினமில்லை)
உரை-நிறை அடியெதுகையாகா. (வல்லின ற மெல்லின ர)

"உருவான பாட்டும் 'உதயக்' கவியே
அருமை! அழகொளிர் அன்பாய் - கரும்பனைய
சொல்லாலே எண்ணித் தொடுத்தக் கவிச்சரமோ
சில்லென்றே சிந்தும் சிலிர்ப்பு."


இராஜ.தியாகராஜன்:)உங்கள் பாடலை என்னால் இயன்றவரை உங்கள் அனுமதியுடன் மாற்றியிருக்கிறேன்; ஆனால் உங்களின் உரைநடை வேந்தன், பேராசிரியர் என்பன போன்ற புகழுரைக்கு நான் நிச்சயம் அருகதை உடையவன் அல்லன்.

அருமை வரிதந்த அன்பராம் ஈகை
அரச ரெனும்நல் லமிழ்தா யினிக்கும்
உரைநடை வேந்தே(!) முகநூலும் உம்மால்
அருஞ்சுவைக் பொன்னியே ஆம்!

உதயனுக்கு இதய வாழ்த்து

நாவினிக்கும் நல்ல பெயர்;
நல்ல தமிழ்ச் சிந்தனைகள்;
பாவுரைக்கும் பா’த்திறமும்
பைந்தமிழன் பாத்திரமும்

உதயன் எனக் காண்கின்றேன்;
உளம் மகிழ்ந்து உரைகின்றேன்;
இதமுடென் முக நூலில்
இன்றே நான் இணைக்கின்றேன்!

இசையரசி எம்.எஸ்’ஸின்
இல்லத்தில்,உள்ளத்தில்
அசைபோட்டு வாழ்ந்தவன்நான்;
அக் காலம்;பொற்காலம்!

அவர் படததை இணைத்துள்ளீர்;
அதனாலும் ஓர் வாஞ்சை!
விவரங்கள் தொடர்வோம் நாம்,
விரிவார்ந்த நட்புடனே...
*
(2)
”நன்று;உள்ளம் செழித்த நல்ல நண்பர்
நமக்குக் கிடைத்த உலகத் தமிழர்;
என்று மகிழ்வாய் ஏற்புரை செய்தேன்;
இதயம் உதயனை வாழ்த்துகின்றது!’

நாலடியாரை நலமுடன் எடுத்து
நாலாதிசைகளும் நவில்கின்றவாறு
நூலிதில் காட்டினை;நுகர்ந்தேன்;இங்கு
நூதனத் தமிழை நூற்றுத் திளைப்போம்!

உலகத் தமிழர் எனும் என்தளத்தில்
உண்மைத் தமிழும் உணர்ச்சித் தமிழும்
பலவிதமாகப் பதிந்ததைச் சென்று
பாரீர்;என்றே வேண்டுகின்றேனே!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

உயிர் வலி

உயிர் வலி

ஒரு புறத்தில் காலநிலை
மறு புறத்தில் கிட்லர் நெறி
இத்துப் போன உலகத்திலே
சேத்துப் போகுதய்யோ!
எம்மினம் எம்மினம் எம்மினம்

புத்தபெருமான் புண்ணியவான்களே!
உத்தமன் நெறிச் சீராளர்களே!

புனித வுடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்

அறிவன் நெறி காப்பது
சிங்களரின் மகாவம்ச மன்று
எங்களரின் மணிமேகலையே!

வெள்ளாடை வேதாளங்களே!
கொள்ளிவாய்ப் பாதாளங்களே!

முள்ளிக் கரைவாய்க் காலில் முடிந்ததோ!
தௌள்ளு தமிழரின் தாயகக் கனவு
எள்ளி நகைக்கும் இனவா திகளே
தள்ளி வையும் செருக்கை புறத்தே
எங்கள் இனத்தை அழித்த உங்களை
சங்காரம் செய்யும் காலம் ஒருநாள்
பொங்கி வழியும் கண்ணீர் பெருகி
வங்கம் போல்வந் தழிக்கும் பாரும்
புலத்தில் வாழ்கை முடியும் வரைநாம்
உலக நீதிக்காய் ஓங்கி ஒலிப்போம்
உணவு கொடுத்து ஊக்கம் கொடுத்து
திண்ணையும் மனையும் கொடுத்த ஈழத்து
மக்களை இறைமை பேசிய எம்மினத்தை
திக்குத் திசையின் றியலை யநீரோ
கோலொச் சியும்குடி மட்டுமோ நன்றாய்
குலங்காத் துவாழு வதுநல் நீதி
துமுக்கி மட்டுமே கீழே வைத்தோம்
அமைதி வேண்டியே அடக்கமாய் உள்ளோம்
நெஞ்சில் கொண்ட தாயகப் பற்று
கொஞ்சம் கூட விலக வில்லை
தாக்கும் படையோ ஆயிரம் வரட்டும்
காக்கும் படைமுன் நிற்கா மலோடும்
அன்னை மண்ணை மீட்கும் வரைநாம்
அண்ணன் வழியே அவர்சொல் மொழியே
நடந்து செல்வோம் நடந்து செல்வோம்
கிடைக்கும் நாடு கிடைக்கு முறுதி
அன்புத் தோழா அருமை நண்பா
கண்ணைத் திருத்து காட்சிப் படுத்து
அன்னை அழுகிறாள் ஆறாத் துயரில்
நின்னைச் செயலும் செயல்வீ ரமாகட்டும்
கொடியை அறுக்கும் நிலையில் குழந்தைகள்
துடித்து இறந்ததை எப்படி மறப்போம்
கையை காலை கண்ணை வாழ்இயற்
கையை இழந்து கிடப்பதை மறப்போமோ?
நிலத்தைப் பறித்து குலத்தை அறுக்கும்
காலக் கொடியவர் அரசினர் குடும்பம்
நிகழ்த்திய கொடுமையை நித்தம் நினைத்தால்
முகத்தில் அழுகை ஆறாகிப் பெருகும்
இந்தியம் சீனம்ஈ ரானியம் பாக்கிதானும்
குந்தகம் செய்த வரோடு ருசியாவும்
அல்வழி நின்று அறத்தைக் கொல்லக்
கொலைகளை மறைத்தன இருபது நாடுகள்
இனத்தைக் காக்க எழுந்த மறவரை
வன்சொலால் ஐரோப் பியஒன் றியமும்
ஐநாஅ வோடம ரிக்கா நாடும்
வைதன வேபயங் கரவா திகளாய்
மறத்தின் வழியே மரபைக் காத்தவர்
அறத்தின் வழியே ஆய்தம் வைத்தாரே
என்ன முடிபு இதுவரை காலமும்
இனவாதி தீக்கே யினம்தீ னியானதே
எங்கே யுலகம் எதிலே மன்பதை
வங்கச் சூளையில் எங்கள் தேயம்
இருபதி னாயிரத் துமுந்நூற் றெண்பது
அருந்தமிழ் மக்காள் சதுரக் கல்நிலம்
சத்தியங் காக்கும் கனவான் களேஎ
கத்துகி றோஉம் செவிசாய்த்துக் கேட்பீரோ
எங்கள் நிலமே எமக்கு வேண்டும்
பொங்கும் கடலின் இருபங் கோடு
தாயகம் தேசியம் தன்னாட் சியிறைமை
தாய்மை யோடு தமிழே வாழ
அரத்த மின்றி அவனியில்
பிரிந்தே போவது நல்தீர் விதுவே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ச.உதயன்

தாங்கி வாழ்வோம் நம்நிலம்

எழுந்த பனிமலை மடிப்புப் போடவும்
எழுநூறு காதம் நாவலந் தேயவும்
கிழிந்த மண்டக் கீழை நிலத்துள்
எழுந்து நின்றன சிற்சில தீவுகள்
ஐயகோ வன்று அறுந்த புவியிலே
இயற்கைச் சூழலும் எரிதண லாயிற்றே
அவலஞ் சூழ்ந்து அமைதியை வேண்டியே
அலைந்து திரிந்தன அறுதிணை யுயிர்களும்
மிதந்த மரங்களில் ஏறிச் சென்றன
மீண்டும் மீண்டும் பயிற்சி பெற்றன
கைகளைச் சேர்த்தன கருவிக ளாக்கின
கருவிகள் கொண்டு வேட்டைகள் ஆடின
கள்ளை யுண்டன கறியைத் தின்றன
கொள்ளை இன்பத்தில் கூடல் கொண்டன
அஞ்சியும் அழுதன ஐம்பூதம் தொழுதன
விஞ்சிய அறிவிலும் வேள்விகள் செய்தன
இப்படித் தானொரு இனமொன்று தோன்றிற்று
இற்றைக்கு பத்தா யிரத்துக்கு முன்பு
பஃறொளி ஆற்றுடன் பழுத்த பேரினம்
படிப்படியாய் கூர்ப்பும் கூர்மையும் பெற்றது
கீறிப் பழகியே கலைகள் படைத்தது
கீற்றுடன் இணைந்தே பாடவும் கற்றது
ஓலைச் சுவடியில் புலமை யாத்தது
ஒன்றாய் இணைந்து வாழவும் வைத்தது
சாலச் சிறப்பாய் திணைகள் வகுத்தது
சேலையும் வேட்டியும் நெய்து போட்டது
கற்காலம் இரும்புக் கரிக்காலம் பொற்காலங்
கற்றறிந்து கல்வியால் நிலங்களைக் கழனியாக்கி
நெல்லுடைத்துச் சோறுண்ட இனமடா எம்மினம்
சொல்லிக் கொள்ள மொழியும் இருந்தது
செல்வம் கொழிக்கும் வளமும் இருந்தது
அள்ளிக் குடிக்க நீருமி ருந்தது
அவனியில் தமிழர்க்கு நாடு மிருந்தது.
என்ன குறைகள் எங்கள் நிலத்திலே
மன்றமி ருந்தது மாட மிருந்தது
கோயி லிருந்தது கோபுர மிருந்தது
கோலொச்சி மன்னர் மாளிகை யிருந்தது
மும்முடி வேந்தர் மண்டலம் போலவும்
நம்மீழ மண்டலம் நம்மோ டிருந்தது.

அப்பால் நிலத்தி லிருந்து வந்தார்
ஆரியர் அவரை யன்புடன் ஏற்றார்
முப்பால் வள்ளுவன் காலத்து முன்பால்
முத்தமி ழேற்றியும் போற்றியும் வைத்தார்
சித்தர் போலவே சித்தம் பெற்றார்
சினந்து தமிழரை இழிந்த்து வைத்தார்
நரிகளாய் மாறி நற்றமி ழழிக்க
பரிகளாய்த் தமிழரைப் பயன்படுத்தி ,னாரே
இருந்த நிலத்தில் பாதியும் போயிற்று
இந்திய மென்றே மாறியும் போயிற்று
எஞ்சிய நிலங்களில் எங்கள் தமிழினம்
வஞ்சமின்றி பஞ்சமின்றி வாழ்ந்தேதான் வந்தது
வணிகம் செய்ய் வந்த பறங்கிகள்
பணிய வைத்தே பறித்துக் கொண்டனர்
வரிகள் போட்டனர் அடிமை யாக்கினர்
உரிக்கும் வரையெமை உரித்தே விட்டனர்
பொன்னும் பெண்ணும் யானையும் பனையும்
என்னென் .னவோவனைத் தையுமேற் றினர்பார்
எஞ்சிக் கிடந்த நிலத்தை விடவே
எங்களர் உரித்தை சிங்களர் எடுத்தனர்
இருபதி .னாயிரத்து முந்நூற் றெண்பது
அருந்தமிழ் நிலத்தையும் இருபங்கு கடலையும்
நேருசே .னனாயக்கா கூட்டுச் சதிகள்
நீறா யாக்கு மென்றஞ்சித் தந்தையர்
நீரா நோன்புகள் நித்தம் செய்தார்
காடைய ரேவிக் கட்டையால் பொல்லால்
காடேறி யரசு கொலையும் செய்தது
பொறுமை இழந்து போரில் குதித்து
போரை மூட்டினர் முப்பதாண் டுகளாய்
இறைமைப் போரில் எழுப தாண்டுகள்
இடரைத் தாங்கிய தமிழீழப் போராட்டம்
இந்தியச் சூழ்ச்சியால் வல்லர சாட்சியால்
குந்தகம் செய்தழித் தனவே யறிவோம்

முன்னே யுளது யிந்திய மாக
பின்னே யுளது சிங்கள மாக
இடையே யுள்ள ஈழத் தாயமே
படைகள் நடந்த தமிழீழம் கண்டோம்
பாய்ந்து திரிந்த எங்கள் நிலத்தை
மொய்யா யெழுத நீவீர் யாரோ
மீண்டும் தமிழர் ஆழுங் காலம்
மிடுக்காய் வருமென்றல் திண்ணம் திண்ணம்
எமக்கே யுரிய சொந்த நிலமதில்
எவனுக்கும் சொந்த மல்லவே வெளியேறும்
நலமாய் வாழ நமக்கொரு நாடு
பொல்லார்ச் சிங்களப் படைஞரே வெளியேறும்
கைகள் கால்கள் கண்களி ழந்தோமன்றி
வையம் தன்னில் வேங்கை கொண்ட
வேட்கை மட்டுமே மேனுமி ழக்கோம்
விடுதலை வரும்நாள் விரைவி லுண்டு
உலகத் தமிழரே யொன்று படுவீர்
ஈழம் மலரு மென்றே கூவுவீர்
புறத்தே நின்று தட்டிய கைகளே
உறைந்து போனீரோ வீழ்ச்சி கண்டு
போர்க்களம் நின்ற புலிகள வர்களை
மறவர் என்றே பரணீ யாத்தோரே
உலாப் பாடி வெற்றிக்கு வாகைசூடி
விழாவெடுத் தோரே புலவோரே நிம்தூவல்
இன்னல் கண்டும் எழுந்து பாடட்டும்
செத்தவீட் டுக்குபின் செலவு கழித்து
திதியொன் றாவதற்குள் திக்கெட்டும் கலைந்தீர்
சொந்தங் களில்லாது சோகத்தில் வாட
வெந்த புண்ணிற் வேல்பாச் சாதீர்
வந்துநீர் வாரும்நம் குழந்தைகள் நலமாக
பந்தமாய்த் தாங்கி நாளையும் வேளையும்
தாங்குமிந்த தாயுமா .னவள்போல்
தாங்கி வாழ்வோம் நம்நிலம் நாமே!

**
ச.உதயன்

என்பாவெனும் வெண்பாவால்

சிவகுமார் சத்தியா னந்தனெனும் ஈழத்
தவப்புதல்வன் ஐப்பசித் திங்கள் - அவதரித்தான்
அப்பன் எதிர்பார்த்த வீரன் தமிழரசன்
ஐப்பசியே வீழ்ந்தான் மடிந்து

மடிந்ததம் சேயவன் நாட்டுப் பணியை
முடிப்பேனெ னத்தானு மொருவனாய்ப் - பொட்டு
படையணியிற் சேர்ந்து வெடிவிபத்தின் போதே
யுடல்சரித்தான் தந்தை அரசன்

மன்னனுக்கு மந்திரிபோல் மானத் தலைவனுக்
கண்ணன் மதியுரைஞர் போரிடும் - மண்ணாம்
தமிழீழ நம்நாட்டுத் தேசக் குரலோனே
மாமணியாய் வந்த திரு

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினாள் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

கரும்புலி வான்புலி எல்லைப் படையுமா
வாரிக் கடற்புலி காலால் தரைப்புலி
வேவுப்புலி வேங்கைப் புலனாய்வும் பெண்புலியும்
சாவுக்கு மஞ்சாப் படை

மூவிலக்க மக்களை முள்வேலிக் கம்பிக்குள்
ஈவிரக்க மின்றியே இலங்கையின் - தீவிலே
சாவடிக்கும் சிங்கள னாணவம் தூளாகத்
தீவிரமாய்ப் போரிடுவோம் நாம்

உலக வலமும் வடமலை நோர்வே
வலமும் தமிழீழ மக்கள் - நிலையும்
கூறி யுலகத் தமிழரை யொன்றிணைக்கும்
பேரிகையே நம்வான் முரசு

ஞாயிறு செவ்வாய் வியாழன் தினங்களில்
நேயமிக்க நல்லோ(ர்) ரொலிவிளம்பி யென்றே
முழங்குக சங்கே முழங்கு

அன்னைநம் பூபதிநல் கல்விக் கலைக்கூடம்
சென்று பயிலடா தம்பீஇ - நன்றாய்
மொழியூறும் தெள்ளு தமிழ்ப்புலமை கொண்டு
செழும்பா செயலாமே நீ

கொக்குப்போல் கூகையை வெல்லும் வலகரக்
காக்கைபோல் பாயும் வரிப்புலிபோன்ம் - திக்கெட்டும்
வாழும் தமிழரே நாம் வலிமையானால்
ஈழம் மலரும் விரைந்து

எரிபொருளு(ம்) மேவுமெரி குண்டும் வடக்கே
யுருகும் பனிமலையும் காட்டு – மரத்தீயும்
ஓட்டை விழுமோசோன் மண்டலமும் வெய்யிலின்
சூடும் கடற்கோளும் கேடு

நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை – விலிமையுந்
தாழா வுறுதியும் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து

செந்தமிழ் மண்ணைப் புடைசூழ்ந்து சூறையாடி
கந்தகமும் வெந்தணலும் தூவித் தமிழீழ
மாந்தரை கொன்றழித்த கொல்மகிந்த
குந்தகச் சிங்களத்தைக் கொல்

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்க
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க(ள்) அவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

வீரனாய் தீரனாய் ஈழநாட் டரசனாய்
கீரனாய் சூரிய தேவனாய்ப் - பிரபா
கரன் வாழ்ந்தாரே காண்

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினால் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க ளவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

ஈழமண் மீட்புப்போ ரில்கள மாடி
விழுந்தனன் சங்கரும் வித்தாய் - எழுந்தது
மீண்டும் நடுகல் வழிபாடு போற்றிப்
பணிந்து தொழுவோமே நாம்

அரியாலை யூரிலே யமர்ந்திருப்பா ளம்பாள்
அருள்மிகு தெய்வ முமவளே - பிரப்பங்
குளமுத்து மாரியம்மன் நல்கு மருள்வேண்டி
யுள்ளம் தொழுதேன் நினைந்து.

ஊரெழு மண்ணிற் பிறந்து திறமைகள்
தீரமாய்க் கற்றுக் கரிகாலன் - போரியல்
வீரனாய்த் தேர்ந்து மதியுரைஞ் மாணவனாய்ப்
பேராள னாய்த்திகழ்த் தான்

முடியுமென் போர்க்கவர் மூச்சே தடையன்று
முட்டிமோ தியேனுந் தாய்மண் - விடிவு
வருமென யெண்ணி முடி

ஊரெழு மண்ணிற் பிறந்து திறங்கள்
தீரமா யமைந்து மருத்துவத் தேர்விலுந்
தேர்ந்து தமிழீழ நாட்டுக்காய் திலீபன்
ஆற்றிய தொண்டே சிறப்பு

ஆழிப்பேய் வந்தூழித் தாண்டவ மாடி
யுழித்ததே யெம்மழகு நாட்டை – மழலையர்
தாய்மார் சிறுவர் பெரியோ ரெனவங்கு
மாய்ந்தனரே பாழ்பாடு நாள்

மேலைத் துருவத்தின் நோர்வே நிலத்திலே
ஆல்போ லிலங்கு மருந்தமிழைச் - சாலவும்
ஆய்ந்தப் புலமையிற் சொல்பொருள் நற்சுவையிற்
தோய வமைத்த களம்

கத்தியும் கதறியும் காப்பாற்ற வாரின்றி
யேதிலியாய்ச் சென்று சிறைபட்டோம் - புத்தாண்டோ
புத்தாண்டாய் இந்நாட்டில் வந்துமென்ன பாரும்
புதைகுழியிற் தானேநம் வாழ்வு

தலைவன் பிரபா கரனியக் கத்தில்
தறைமுறை காக்க விணைந்து – புலியாய்
செருக்கள மாடிவீழ்ந்த நம்மாவீ ரர்தம்
பெருமையோ டெண்ணிப் பணித்து

ஒற்றைச் சிறகிழந்து மோயாத வீரனவன்
சற்று முறுதி குலையா – மறவன்
கரிகாலன் தூது வனாயுல கெங்குங்
குரலெழுப்பி னான்தமிழ்ச் செல்வன்

புனித வுடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்

உயிரை நினைந்து விடுதலை நாள்மறந்து
மாய்தல் மறவர் சிறப்பல்ல – வயிரம் போல்
தாய்மானங் காக்கும் பிரபா கரன்வழியே
பாயும் புலியாகி வா

பாமாலை

அகர மமுதா எழுதி வழங்கும்
முகனை எதுகை மரபியல் - பாக்கள்
இணைவலையில் காணலாம் கற்கலாம் நீயிர்
வெண்பாவும் வடிக்கலாம் போய்

பங்குனித் திங்கள் பதினொராம் நாளன்று
எங்களது வீடும் இலங்கிற்று – கங்குலுஞ்
ஞாயிறுங் கைசேர்த்த போதுநம் சாமந்தி
சேயாய் கிடைத்ததே பேறு


அந்திப் பகல்காரி கார்த்திகைத் திங்களிலே
செந்நாப் புலவோர் அருந்தமிழ்ப் - பந்தலிலே
செய்யுளுஞ் சித்திரமுஞ் சேர்த்தே குணதாசன்
பயிற்றிய பாடமோ நன்று

உதயா வசியு மிணைந்தால் போதும்
இதமாய் வருடு மிசைவரி ரெண்டும்
புதமாய்ச் சுரத்தில் கதைகளுஞ் சொல்லும்
புதிய யிசை வார்ப்பு

கட்டளை கலித்துறை

செவ்வையும் மஞ்சளும் வண்ணங்கள் வீரத்தோ டமைதியாய்
செவ்வக் கொடியிற் சீறும்வரி புல்இ வலிமையதாய்
மாவலி வேந்தன் கரிகாலன் தந்த படைஞருமாய்க்
காவியஞ் செய்தே யெழுந்தாரே ஈழ நிலந்தனிலே

**

கதிரவேலு.பொன்னம்பலம்.சத்தியானந்தன்
முப்பாட்டன்,பாட்டன்,ஐயா
ச.உதயன்

மனு

மனு

பட்டதாரிகளே!
ஐயா! பட்டதாரிகளே!
நலமா, உங்கள்
அழுக்குப்படாத மட்டைகள்
எல்லாம் நிலைப்பெட்டகத்துள்
நலமா! இருக்கட்டும்.
பூச்சி அரிக்காம
அடிக்கடி
பூச்சிமுட்டை போடுங்கோ
.
BA,MA,Dr அட உங்க
பட்டங்கள் கூட
ஆங்கிலம் தான்
பேசுது பாருங்க
பேசட்டும் பேசட்டும்
.
தண்ணீரில் கால் வைத்து
தவமாய் இருந்து
படிச்சு படிச்சு
என்னத்தைக் கண்டீர்?
என்ன தான் செய்கிறீர்?
.
பாரதச் சுருக்கத்தில்
பாதி நாள் போச்சு
கம்பன் தொகுத்த
பதினாலாயிரம்பாடல்
பாவியத்தில்
பாதி நாள் போச்சு
என்னத்தை படித்தீர்?
என்னதான் செய்கிறீர்?
.
கற்பில் சிறந்தவள்
கண்ணகி என்று
கட்டிய மனைவியை
சோதனை செய்யும்
பட்டாளத்தை உருவாக்கினீர்.
.
சக்கர நிலவு
சக்கரை நிலவாம்
நிலத்துக்கு சேலைகட்டி
உலவ விட்டுகிறானாம்
கொக்கை மீன் முழுங்குதாம்
அறுகம்புல் ஆட்டை மேயுதாம்
திரையில் கிறுக்கும்
கிறுகன்களை உருவாக்கினீர்.
.
அகத்தில் இருக்கும்
அசூரனைக் கொல்லாமல்
ஆண்டுதோறும்
சூரன் போர் நடத்துது
கோயில் படை
"பயிர் வாடும் போது
நானும் வாடினேன்"
சுவருக்கு அறிவுரை
கூறிவிட்டு
வாழைவெட்டு நடத்துது
பூனூல் படை
புராணங்கள் தான்
மிச்சம்.
.
திருத்தமாட்டீரோ
திருத்த வந்த பட்டறிவாளன்
பாவாணரையும் விரட்டி
வேடிக்கை பார்த்தீர்
இன்னும் இருக்கிறார்
உம்மால் விரட்டப்பட
திருந்த மாட்டீரோ
இனியேனும் இலேகியங்களே
.
சோதனைக்கு எழுதி எழுதி
களைத்துப் போனதோ!
மை காய்ந்து
தூவல்கள் எல்லாம்
தூங்கி விட்டதோ!
.
மாடு சொன்னா கேட்காது
மணிகட்டின மாடுகள்
சொல்ல வேண்டும்
மந்தைகளுக்கு
மந்திகளுக்கு
.

_அரசன்.தமிழரசன்.

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

மாமரக் கூடல்
மழை பெய்தால்
வெள்ளமாகும்
விளையாட்டுத் திடல்

தேவார மண்டபம்
திரிந்த வளாகம்
நாடக அரங்கம்
நடித்த மேடை
.
பாடிய பாடல்
கீறிய கீறல்
எழுதிய கவிதை
எல்லாம் அங்கு தான்.
.
சின்னச் சின்ன கைகள்
செதுக்கி வைத்த
களிமண் சிற்பங்கள்!
.
வண்ண வண்ண
நிறங்கள் ஊற்றி
வடிவாய் வரைந்து
வைத்த சித்திரங்கள்!
சேர்த்து
வைத்த
கூடம்!
.
குட்டி போட்டு
குலை தள்ளிய
வாழை
வெயிலடித்தால்
குடை பிடிக்கும்
வேப்பமரம்
.
புகை படிந்த
சமையறை
சமைத்துக் கொடுத்த
சூடான கொழுந்து நீர்
சுவையான வடை
நரம்பை
சுண்டியிழுக்கும்
.
எங்கோ சேய்மையில்
கூவும் குயில்ச் சத்தம்
மயிலிறகு வீசும்
மரவள்ளித் தோட்டம்
மனதை வருடும்
மென் காற்று
.
காற்றோட்டமுள்ள
கட்டைச்சுவர் படிப்பறை
கடைசி வரிசையில்
கவனிப்பாரற்று
காலுடைந்த
இருக்கை
.
கவத்தை ஈட்டும்
கவனமில்லா
அகவை அது
.
முன் வாங்கார்
பின் வாங்கில்
பின் வாங்கார்
முன் வாங்கில்
இடையே என்னிருப்பு
எண்ணமெல்லாம்
கவிஞனாய் மேடையில்
.
இடையிடை ஒலிக்கும்
மணியும்
இடைவேளை மணியும்
இறக்கை விரித்து
பறக்க வைக்கும்
.
சத்திரதில் காத்திருப்போர்
போல்
சத்துணவுக்காய்
நாம்
.
பயரோ ஒரு கவளம்
சுண்டலாயின் ஒரு சுண்டு
கடலைக்கு கைச்சுருள்
நாளுக்கு நாள்
எதிர் பாராது
நம்மை வளர்த்த
பள்ளிக் கூடம்
.
அன்று
அந்தப் பள்ளியில்
மாணவப் பருவம்
இன்று
அன்னை பூபதியில்
மாணவருக்கருகில்
ஆசானாய் பேறு
பெற்றேன்.
.
நாவினிக்க படித்த
தமிழ்
நாடு தாண்டியும்
பயனாகிறது
நன்றியம்மா
நன்றி
நானறிந்த பள்ளிக்கூடமே!

_அரசன்.தமிழரசன்.

அரியாலை ஊர்

கால் மிதித்து நண்டு பிடிக்கும் கடல்
காய்ச்சுக் கொட்டும் தென்னைகள்
ஈச்சஞ்செடிக் குலைகள்
இருந்து எலி பிடிக்கும் பச்சைப் பாம்பு

நீண்டுயுர்ந்த பனைகள்
நிறை மாதக் கதிர்கள்
நாசு தொடும் நாவலடிக் காற்று

அழகுக்கோன் வண்டில் மாடுகள்
அளந்து திரிந்த சாலை
கொள்ளியிட கோடியில்
சித்துப்பாத்திச் சுடலை

வாருங்கள் என்று வளைந்து
வரவேற்கும் யாழ் வரவு - கண்டு
ஊருக்குள் நுளைந்தால்

வீடுகள் விழிக்கட்டும்
வெளிக்கிடடி விசுவமடு
அரச நாடகங்கள்
அத்தனையும் மனதில் ஓடும்

ஆத்திக்காடு
அல்லியும் தாமரையும்
அழகாய் பூக்கும் நெடுங்குளம்
ஆங்கொரு கோயில்

ஆண்டுக்காண்டு
வண்டில் மாட்டுச்சவாரி
போட்டி நடத்தும் பெருந்திடல்
சிங்களப் படையை புலி
வேட்டையாடிய நெடுஞ்சாலை

வானெட்டும் கோபுரம்
வேறி குதித்து விளையாடும்
தேர் மூட்டி
ஏடு தொடக்கிய பள்ளி

தாண்டினால் தபால்கடைச் சந்தி
தளபதி விக்டர் நினைக்கற் சிலை
மாவீர் புகழுரைக்கும் சந்தைச் சுவர்
சந்தைக்குள் நேச மணிக்குரல்

வலது கை புறத்தே
பெருநன் சந்தோசம் வீடு
பேச்சியம்மன் கோயில்

இடது கை புறத்தே
ஆனந்தம் வடலி
கிட்டண்ணன் பாசறைகள்

கலையூட்டிய கலையரங்கம்
வாசித்துப் பழகிய வாசகசாலை
கராத்தே பயிற்சி கொடுத்த
மூன்றாம் மாடி
என்னூருக்கு எஃபெயில்

மாம்பழஞ் சந்தி
மாவீர்ன் மதி
திருவுருவச் சித்திரம்

வலது கை புறத்தே
நாயன்மார் கட்டு
இடது கைபுறத்தே
இலந்தைக் குளம்

கிட்டியடித்த நெசவுசாலை
மீன் பிடித்த பிரப்பங்குளம்
கோச்சி விட்ட மணல்
அம்மை போலிருந்த முத்துமாரி
அம்மன் கோயில்

நீச்சலடித்த பெருமாள் தோட்ட
நன்னீர்க்கேணி
கார்த்திக் மரித்த மதவு
புகை வண்டி ஓய்வெடுக்கும்
புங்கன்குளம்

காற்பந்து விளையாடிய
காசிப்பிள்ளையரங்கப் புல்வெளி
கற்றுக் கொடுத்த கல்வி நிலையம்
என்னையும் தமிழையும்
இயக்கிய
கனகரட்னம் மத்திய மகா வித்தியாலயம்

என
நாற்புற நடுவில்
அரிய கலை யூரெனும்
அரியாலையாம் என் ஊர்.

_ச.உதயன்(அரசன். தமிழரசன்)

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தமிழ்

தமிழ்
மூவினங்கள் கலந்த தமிழ்
முத்தமிழாய் வளர்ந்த தமிழ்
மூவேந்தர் நாடுகளில்
முடிசூடி ஆண்ட தமிழ்

சிவனோடு நடமாடி
செந்தமிழாய் வாழ்ந்த தமிழ்
சீவுளியால் செதுக்கி முன்னோர்
செம்மொழியாய் காத்த தமிழ்

பகையோடு களமாடி
கரும்புலியாய் வாழும் தமிழ்
புலம் பெயர்ந்த நாடுகளில்
தலைமுறையை காக்கும் தமிழ்

பெண்ணினத்து அடிமைகளை
பெயர்த்தெறிய முழங்கும் தமிழ்
பதினாறு குணங்களையும்
பாரினிலே கொண்ட தமிழ்

குமரிமலை நிலம் தொட்டு
தமிழீழம் இன்று வரை
அனுபவங்கள் கூறுந்தமிழே
அந்தமிழே எங்கள் தமிழ்

_அரசன்.தமிழரசன்.

எங்கள் வீடு

ஈழ மெனும்நாட் டிலேயிலந் தைக்குளச்
சாலையில் நாற்பத்தா றெண்ணில்
எனதில்லம் உள்ளது
எங்கும் சோலை வனமதில்
ஏங்கு மெந்தன் வாழ்வும் நகர்ந்தது.
தென்னை மாமரங் களும்மலர்
அளைந்த தென்றலும்
புள்ளிச் சேவல் கூவலும்
நீலக் குயில்பா டலும்நித்த
மொல்லு மெந்தன் சிந்தை யுயிருள்ளே!!
_ச.உதயன்