உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வியாழன், 7 அக்டோபர், 2010

அமைதிப்படை செய்தது என்ன?

விண்ணூர்தியின் இரைச்சல்.....? நானும் எனது நண்பர்களும் வானதைப் வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றோம்;எமக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த நாள் இரவே வீட்டுக்குச் செய்தி வந்தது. இந்தியா தமிழருக்கு உணவுப் பொதிகள் அனுப்பி வைத்தது. மிராச்சு (Mirach) அதைக் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றது. அது அங்கொன்று இங்கொன்றுமாக போட்டுவிட்டுச் சென்றது. இந்தியா உணவுப் பொதிகளை போடும் அளவுக்கு ஈழம் அதிலும் தமிழீழம் வறிய நாடல்ல. சாந்தன் பாடியது போல "நீர் வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை" ஆம். நிம்மதி ஒன்றுதான் இல்லை. அதற்காகத் தான் இந்தியாவை இந்திராவை உதவி கேட்டோம். ஆனால் இந்தியா இன்றுவரை இரண்டகம் செய்தே முடித்தது. பிரபாகரம் பயங்கரவாதம் என்று கதை புனைகிறது. குரங்கு அப்பம் பிய்த்த கதை போல் ஆகிவிட்டது தமிழர் தாயகம்.
இந்தியாவின் நிலைப்பாடு சரியாக இருந்திருந்தால் அமைதிப்படையாக வந்தவர்களின் செயற்பாடும் நன்றாக அல்லவா இருந்திருக்கும். நேரு நாடு எதை எண்ணியதோ தமிழருக்கு நேர் வந்த அமைதிப் படையும் அதையே செய்தது. காந்தி நாடென்று சொல்ல வாய்கூசுகிறது. மன்பதை நிறைந்தவர் காந்தி. நேர்மையின் விளக்கு காந்தி. நிம்மதியின் தென்றல் காந்தி. தமிழரின் நம்பிக்கை காந்தி. ஆனால் காந்திநாடு என்ற தேசம் நேருவை தாங்கிவந்தது. அதற்குப் பெயர் தான் இந்திய அமைதிப்படை.
அமைதிப்படை கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றது. அன்று காலை நானும் நண்பர்களுமாக வேடிக்கை பார்க்கச் சென்றோம். அன்று எங்கள் அகவை வேடிக்கை பார்க்கும் அகவை தான். அங்கு நின்ற படைஞரில் சிலர் தமிழும் பேசினர். நல்லவர் என்றே அவர்களோடு உரையாடினோம். "நீங்கள் எங்கள் அமைதிப்படையா" என்று நண்பன் கேட்டான்."ஆமா" என்று அவர் பதிலளித்தார்."புலிகளோடு சேர்ந்து போராடப்போகிறீர்களா" என்று கேட்டேன்.அவர் சிரித்துக் கொண்டே "மக்களுக்கு அமைதியைக் கொடுக்கவே வந்துள்ளோம்" என்றார். அப்படியென்றால் "புலிகளுக்கும் உங்களுக்கும் போர் மூளுமா" என்று மேலும் கேட்டேன். இல்லை. "அவர்களுக்கும் எங்களுக்கும் போர் மூண்டால்; சுருட்டைப் பற்றி அணைவதற்குள் அடக்கி விடுவோம்" என்றார். அவரோடு மேலும் உரையாடினோம். சாப்பாடு பற்றியும் குடிநீர் பற்றியும் கேட்கும் பொழுது. "உங்களுக்கு எல்லா ஏந்துகளும் இருக்கின்றனவே! எதற்காக இலங்கை அரசோடு போராடுகிறீரக்ள்" என்று கேட்டார். நாமும் சிரித்துக் கொண்டு நின்றோம். அவ்வகவையில் சிரிக்கத் தான் முடிந்தது. அவர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வந்த சில நாட்களில் போராட்டங்களும் தொடங்கிற்று.
பழைய பூங்காவுக்கு இந்தியத் தூதுவர் 'இடி'க்சிற் வந்திருந்தார். அமைதிப் படைஞர் நிறையப் பேர் நின்றிருந்தனர். அவர் பேசத் தொடங்கியதும் சில பெண்கள் சொல்லிச் சொல்லி கூச்சலிட்டனர்.( அவர்களுக்கு இந்தியா மேல் நம்பிக்கையின்மையே) அந்த அக்கைமாரை பார்த்த போது ஏதோ ஒரு ஏக்கம் தென்பட்டது.
தொடர்ந்து மறியல் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. திலீபன் அவர்களும் வரலாற்று உரையை வழங்கினார். அமைதிப்படை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு நெருக்குவாரத்தைக் கொடுத்ததை கேள்வியுற்றோம். புலிகளின் போராளிகள் இயக்கப் பகையால் தாக்கப்பட்டர் சில போராளிகள் கொல்லப்பட்டனர். இந்தியா அவற்றில் அக்கறை செலுத்தவில்லை. திலீபன் அவர்கள் பாடுகிடக்கப் போவதாகவும் ஐந்து கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் சாகும்வரை தொடரும் என்று அறிவித்தல் கொடுத்தனர்.இந்தியா கைவிட்டது திலீபன் அவர்களின் உயிர் உருகிப்போனது. அவர் பாடுகிடந்த போது பாடசாலைகளில் இருந்து ஆசிரியர்கள் எங்களை நல்லூர் கோயிலுக்குக் கூட்டிச் சென்றனர். ஊருப்பட்ட மக்கள் எல்லோர் முகங்களிலும் ஏக்கங்கள் மக்கள் ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லை இந்தியா. இப்படியே இருக்க கைதுசெய்யப்பட்ட தளபதிகள் உட்பட பன்னிரு போராளிகளின் இழப்பு வடக்கில் இப்படியென்றால் கிழக்கில் அன்னை பூபதி பாடுகிடந்து உயிர் நீத்தார். தமிழீழம் பெருஞ்சோகத்தில் ஆனால் அமைதிப்படையோ ஆக்கிரமிக்கும் நோக்கில்.
அமைதிப்படை ஆக்கிரமிப்பை தொடங்குவதை கவனித்த புலிகள். போருக்கு அணியமானார்கள். தேசியத்தை விற்பதில் பலர் முயன்றனர் ஆனால் புலிகள் இடமளிக்கவில்லை. அதனால் போர் மூண்டது.

புலிகள் இந்தியப் போர்
ஐப்பசி மாதம் போர்மூண்டது. யாழ் பல்கலைக்கழகதுக்கு அண்மையான விடுதிகளில் பல மாணவர்கள் மாணவிகள் தங்கியிருந்தனர். புலிகளுடனான போரில் இந்தியப் படைகளுக்கு இழப்புகள் ஏற்பட்டது.அதற்குப் பழிவாங்கும் முகமாக விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகளை பாலியல் வன்புணர்வால் தாக்கினர். அதைக் கேள்வியுற்ற புலிகளுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்தியது.இந்திய வடிவேல் அரசால் இழிவான செயல்களை தான் செய்யமுடியும். அதனால் தான் அவ்வாறு செய்தது.அதே போல் சாகச்சேரியில் உலங்கு வானூர்தி சுடுகுழலால் பிள்ளைகள் உட்பட பலரை கொன்றுகுவித்தது. அதேபோல் யாழ் மருத்துவ மனையில் மருத்துவர்கள் உட்பட பல ஊழியர்களையும் இந்தியப்படைகள் கொன்றனர்.ஆடு மாடுகள் கோழிகள் வளர்ப்பு விலங்குகளை இறைச்சியாக அடித்து உண்டனர். இவையனைத்து எனக்குத் தெரிந்த உண்மைகள் இன்னும் பல உண்மைகள் எங்கள் மண்ணில் புதைந்துள்ளன.

இரண்டக இந்தியா
இந்தியப் படைகள் சுருட்டு பற்றி அணைவதற்குள் புலிகளை ஒழித்துவிடுவோம் என்றார்கள். பன்னிரண்டு நாள்கள் நாவற்குழி இராணுவப்படை பாசறையில் நிலைகொண்டிருந்த படைஞரை தடுத்துவைத்தார்கள். பன்னிரண்டாம் நாள் புலிகளின் அரண்களில் இருந்து போராளிகள் பின்வாங்கினர். நாவற்குழிக்கு அண்மையில் எங்கள் ஊர் அரியாலை நோக்கி ஏவுகணைகள் வீழ்ந்துகொண்டிருந்தன.எங்கள் சாலைகளில் போராளிகள் அரண்களை அமைத்து எதிர்த்துக் கொண்டிருந்தனர்.வீட்டிலுள்ள தண்ணீர் தாங்கிக்குள் எங்களைக் காத்தபடி அப்பாவும் அம்மாவும் அச்சத்தோடு நின்றதை பார்த்து ஏக்கத்தோடு கேட்டேன். எங்களுக்கு அச்சமாக இருக்கிறது வீட்டைவிட்டு வெளிக்கிடுவோம் என்று அதற்கு அப்பா உடன்பட்டார் நாங்கள் புறப்பட்டு போகும் போழ்து துமிக்கிகளோடு போராளிகள் களமுனைக்கு சறத்தோடு செல்வதைக் கண்டோம். அப்பா கேட்டார் "என்ன தம்பி "என்று "நரிகள் நாட்டுக்கு வருகின்றன" என்று கூறியபடியே விறுவிறுப்பாக நடந்தார்கள். அவர்களிடத்தில் அச்சம் தெரியவில்லை துணிவே தெரிந்தது.

இப்படியே ஓடிக்கொண்டு நாங்கள் நல்லூருக்குச் சென்றோம். பெருவாரி மக்கள் என்ன கோலம். அமைதிப்படையாக வந்தவர்கள் ஏன் வந்தார்கள் என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது. அன்றிரவு நல்லூர் கோவிலில் தங்கினோம். இரவு எனக்கருகில் பெரியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு பாலியல் நோய்போலும். அவனின் துன்பத்தில் இருந்து விடைபெற விரும்பி அம்மாவிடம் சொன்னேன். "நாம் இங்கு தங்க வேண்டாம் எம்முறவுகளோடு தங்குவோம்" என்று அதற்கு அம்மாவும் இணங்கி உறவுகளோடு தங்கினோம். கோயிலில் தங்கியிருந்த பலருக்கு வயிறோட்டம்,காய்ச்சல் என்று கொடிய நோய்களும் தொடங்கியது.

காந்தி வளர்த்த இந்திய நாடா ஈழத்தில் மக்களை அழிக்கிறது என்ற ஏக்கம் மேலோங்கியது. தலைக்கு மேலே குண்டுகளின் இரைச்சல் சாலைகளில் குழந்தைகளின் இரைச்சல் இப்பழி ஒரு நாள் இந்தியாவைச் சுடும்.

எங்கள் மக்களைக் காக்கவல்ல இந்தியா வந்தது. கொலைக்களமாக்கவே வந்தது.
தமிழீழம் இந்தியாவின் கைவீழ்ந்தது ஆனாலும் புலிகள் ஓயவில்லை. வன்னிக்காடுகளில் பெருத்தபோர். யாழைக்கைப்பற்றிய பின் சாலைகளேங்கும் தமிழரின் பிணங்கள் இலந்தைக்குளம் இரத்தகுளமானது புளியடி பிணங்களின் சுடுகாடானது. எனது மாமாவும் அதிலே சுடப்பட்டார்.

வீடுகளுக்கு திரும்பிய நாங்கள் பிணங்களையே சுட்டோம். வீடுகளில் வெடிமருந்து பொருள்களும் சப்பாத்தி மணமும். எங்கள் சூழலையே இந்தியப்படை மாசுபடுத்தியது. அடிக்கடி சுற்றிவளைப்பு தேடுதல் என்று செய்து முடித்தது. என்கண்ணுக்கு முன்னால் ஒருவர் கள்ளுக்கு ஏறி அவர்களைச் சுட்டுவீழ்த்தினர்.இப்படி பெருத்த இடர்களைத் தந்த இந்தியப்படை 1990 எமது மண்ணைவிட்டு வெளியேறியது. இரண்டகப்படை வெளியேறிய நாளும் எங்களுக்குத் திருநாள்.

அமைதியேற்படுத்தித் தருவதாக வந்து பெருத்த அவமானத்தோடு வெளியேறியது.

திங்கள், 4 அக்டோபர், 2010

திடீரென்று ஒருநாள்!!!

ஒருநாள் திடீரென்று உலங்கு வானூர்த்திகளின் இரைச்சல்கள் செவிகளைக் கிழித்தன. வழமையாக அவை சேய்மையாகத்தான் பறந்து செல்லும் ஆனால் அந்த நாள் மிக அண்மித்தே பறந்தன. வீட்டுக் கோடிக்குள் இறங்குவது போல் இருந்தது. எமக்கு ஒன்றும் புரியவில்லை புலிகளுக்கும் இராணுவத்துக்கும் அடிக்கடி போர்மூளுவதுண்டு. அல்லது குண்டு வீச்சு விண்ணூர்திகள் நல்லூர் பக்கமாகவோ அல்லது யாழ் மணிக்கூட்டுக்கு அருகேயோ குண்டுகளை வீசிச்செல்லும். வீட்டுக்கு அண்மையாதலால் மனம் பதபதைத்தது. சிறிது நேரத்தில் சாலை வழியாக சில இளையவர்கள் ஓடித்திரிந்தனர். எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முன்றலில் நின்று நாம் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது எங்கள் வீட்டு வாய்க்காலில் திடீரென்று தலையணி அணிந்த இராணுவத்தினர் தென்பட்டனர். அவர்கள் எம்மை ஒன்றும் செய்யவில்லை. இராணுவத்தில் ஒருவன் வாயில் விரலை வைத்து அப்பால் செல்லும்படி சைகை காட்டினான்.அவர்"சத்தம் போடாதீர் அப்பால் செல்லுங்கள்" என்றே எண்ணிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே அம்மை எங்களை அழைத்துக் கொண்டு வேலிக்கூடாக வள்ளியக்கா வீட்டு போய், சாலையைக் கடந்து பெரிய வள்ளியக்கா வீட்டுக்குப் போய் ஆறுமுகம் அண்ணை வீட்டையடைந்தோம். அங்கு நின்றவர்களிடம் நிலமையை விளங்கப்படுத்தினோம். எல்லோரும் ஒரே பரபரப்புடனே நின்றார்கள். ஆறுமுகம் அண்ணையின் பின்வீட்டில் நின்றோம். சாளரத்தினூடாகப் பார்த்தால் புளியடிச் சந்தி தெரியும். புளியடியில் பெருவாரியாக சீருடையணிந்தவர்கள் நின்றார்கள். அவர்கள் புலிவீரராய் இருக்குமென்பது அம்மையின் கணிப்பு. ஏனெனில் அவர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை.
திடீரென்று குண்டுச் சத்தம். அப்பொழுத்து தான் ஏதோ அனர்த்தம் நிகழப்போவதை உணர்ந்தோம். வெடிச்சத்தங்களும் கேட்டன. சில மணிநேரத்தில் எல்லோரும் அங்குமிங்கும் ஓடித்திரிந்தனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமே மோதல் நடந்தது. அனந்தம் வடலியில் கிட்டுமாமாவின்(யாழில் எல்லோரும் அவ்வாறே அழைப்பர்) பாசறை ஒன்று இருந்தது. அந்த பாசறையை முற்றுகையிடவே இராணுவ நடவடிக்கை நிகழ்ந்திருந்தது போலும்.
சன்னங்களின் சத்தங்கள் ஓய்ந்தன. ஆனால் சாவு ஓலம் கேட்டது. யாரையோ சுட்டுவிட்டனர் என்று தெரிந்தது. "இராணுவத்தோடு நேரடி மோதலில் ஒரு புலிவீரன் வீரமரணம் அடைந்தார். அக்களத்தில் இராணுவத்தினருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் போல அதற்குப் பழிவாங்கலாக இந்திரன் என்ற அப்பாவியையும் சுட்டுவிட்டுச் சென்றனர். அப்பாவி அவ்விளைஞனும் அரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடந்தான்" என்று பார்த்தவர்கள் கூறினார்கள். அச்சத்தால் நாங்கள் சென்று பார்க்கவில்லை. "திடீரென ஊர்தியில் வந்த புலிகள் விழுந்த வீரரை ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர்" என்று கூறினார்கள். இந்திரன் ஓர் அப்பாவி இளைஞன். அவன் உழைப்பிலேயே அவன் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல பொறுப்பான பையன். அவனை இழந்ததால் அக்குடும்பம் மேலும் வறுமைபட்டு வாழ்ந்தது.
புளியடி மூலைச் சுவரில் ஒட்டிக்கிடந்த சுவரொட்டியில் 'கார்த்திக்' வீரமரணம் என்று கிடந்தது. அவரே தான் அக்களத்தில் வீரச்சாவைத் தழுவியவராவார். ஓரிரு மாதங்கள் கழித்து புலிகள் காட்டிக்கொடுத்தவரை பிடித்து தண்டணை வழங்கினர். புலிகள் எதிரிகளை மன்னித்து விட்டாலும் காட்டிக்கொடுப்பவருக்கு தண்டனை கொடுக்காமல் விடார்.

ஆயினும்,

உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமையில்லை என்ற அறிவன்(புத்தன்) நெறியைப் பின்பற்றும் வரை இலங்கைக்கு மீட்சியில்லை.