உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

மாவீரர் மாதம்

புலியுடை பூண்டு களத்திலே நின்று
வலியினைத் தாங்கி வரைந்திடும் கவிதை
கார்த்திகை மாதம் மாவீரர் சூடும்
கார்த்திகை பூவாய் கமகமக் கும்மே
ஆயினும் இன்றோ அவலமே சூழ்ந்து
பாயிரம் பாட முடியா மண்ணுக்காய்
ஆயிர மாயிரம் வீழ்ந்த நாயகர்க்காய்
வாயுரை யேனும் வழங்குதல் நன்றே
பிள்ளைகாள் கேளும் இளைஞர்காள் கேளும்
உள்ள முருகி ஒன்றான மக்காள்
ஒருமுறை எனது வலியையும்
பொறுமையாய் நின்று கேளும் கேளுமே!

ஒற்றைப் புலியாய் உறுதியின் வலிமையாய்ப்
பற்றைக் காடுகளில் பதுங்கி வாழ்ந்து
சிங்களப் படைஞரின் பாசறை நொருக்கி
வங்கம் சிலிர்க்க வாகை கொண்டு
எங்கும் இமைக்கும் விண்மீன் விசும்பில்
ஏறித் திரிந்து பகைவன் குகைக்குள்
சீறிப்பாய்ந்து செருக்கை இடித்துச்
செறுக்களம் வெல்லசீர்ப் படுத்திய தலைவனே!

நாங்கள் தமிழர் கோழை களாய்த்திரிய
நொந்து வெந்து நீறாப் போக
சொந்த மண்ணை இழந்து வாஅட
சூழுரைத்தான் சூரியத் தேவன்பிர பாகரனே!
நாளும் பொழுதும் தூக்கம் துறந்து
ஏலும் என்றோர் பலரை இணைத்துப்
போர்ப்பயிற் சியளித்து பெருவீர ராக்கி
சீறு மெரிகணை நடுவே நிறுத்தி
ஈட்டிய வெற்றிகள் எண்ணி லடங்கா
தீர்ந்து கிடக்கும் தீவுகள் தொட்டு
ஆர்ப்பரித் தோடும் மணலாறு வரையும்
வரிப்புலி வரைந்த தமிழீழ எல்லைக்குள்
வீறு கொண்டு வீரர்கள் நடந்தனரே!

ஒருவரைப் பாடவோ இருவரைப் பாடவோ
ஒவ்வொரு புலியும் ஒவ்வோர் வரலாறு
முள்வேலி அணைக்குள் அடங்காக் காட்டாறு
பல்லைக் காட்டிப் பசிதீர்க்கா புயற்காற்று
பெண்ணும் புலியாய்த் தோற்றம் பெற்றதும்
பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி யல்லவோ
கரிச்சட்டி தேய்க்கவும் குழந்தை சுமக்கவும்தன்
னுரிமை இழந்து முடமாய் வாழ்ந்தவள்
நஞ்சுக் குப்பியை கழுத்தில் சூடி
அஞ்சா நெஞ்சோடு சன்னக் கோர்வையை
சரிபார்த்துச் சுடுகுழல் இயக்கும் மறத்தியர்க்கோ
என்ன துணிவு எத்துணை வீரம்
அண்ணன் வளர்த்த அனல்குஞ்சு கல்லவோ
இரட்டைப் பின்னலை எடுப்பாய்க் கட்டி
இன்முகச் சிரிப்பில் இடரினைக் களைந்து
பன்முக ஆற்றலாய் பாரிலே தோற்றமாய்
பெத்த தாய்க்கும் போதிக்கும் மறைப்பெண்ணாய்
செத்தாலும் மண்ணுரிக்காய்ச் சாவேன் என்றுறுதியாய்
வாழ்ந்த வேங்கைகள் கண்டுதமிழ்த் தாயென்ன
ஞாலத் தாயுமும் தாள்பணிந்து கொண்டாளே!