உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

திங்கள், 4 அக்டோபர், 2010

திடீரென்று ஒருநாள்!!!

ஒருநாள் திடீரென்று உலங்கு வானூர்த்திகளின் இரைச்சல்கள் செவிகளைக் கிழித்தன. வழமையாக அவை சேய்மையாகத்தான் பறந்து செல்லும் ஆனால் அந்த நாள் மிக அண்மித்தே பறந்தன. வீட்டுக் கோடிக்குள் இறங்குவது போல் இருந்தது. எமக்கு ஒன்றும் புரியவில்லை புலிகளுக்கும் இராணுவத்துக்கும் அடிக்கடி போர்மூளுவதுண்டு. அல்லது குண்டு வீச்சு விண்ணூர்திகள் நல்லூர் பக்கமாகவோ அல்லது யாழ் மணிக்கூட்டுக்கு அருகேயோ குண்டுகளை வீசிச்செல்லும். வீட்டுக்கு அண்மையாதலால் மனம் பதபதைத்தது. சிறிது நேரத்தில் சாலை வழியாக சில இளையவர்கள் ஓடித்திரிந்தனர். எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முன்றலில் நின்று நாம் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது எங்கள் வீட்டு வாய்க்காலில் திடீரென்று தலையணி அணிந்த இராணுவத்தினர் தென்பட்டனர். அவர்கள் எம்மை ஒன்றும் செய்யவில்லை. இராணுவத்தில் ஒருவன் வாயில் விரலை வைத்து அப்பால் செல்லும்படி சைகை காட்டினான்.அவர்"சத்தம் போடாதீர் அப்பால் செல்லுங்கள்" என்றே எண்ணிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே அம்மை எங்களை அழைத்துக் கொண்டு வேலிக்கூடாக வள்ளியக்கா வீட்டு போய், சாலையைக் கடந்து பெரிய வள்ளியக்கா வீட்டுக்குப் போய் ஆறுமுகம் அண்ணை வீட்டையடைந்தோம். அங்கு நின்றவர்களிடம் நிலமையை விளங்கப்படுத்தினோம். எல்லோரும் ஒரே பரபரப்புடனே நின்றார்கள். ஆறுமுகம் அண்ணையின் பின்வீட்டில் நின்றோம். சாளரத்தினூடாகப் பார்த்தால் புளியடிச் சந்தி தெரியும். புளியடியில் பெருவாரியாக சீருடையணிந்தவர்கள் நின்றார்கள். அவர்கள் புலிவீரராய் இருக்குமென்பது அம்மையின் கணிப்பு. ஏனெனில் அவர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை.
திடீரென்று குண்டுச் சத்தம். அப்பொழுத்து தான் ஏதோ அனர்த்தம் நிகழப்போவதை உணர்ந்தோம். வெடிச்சத்தங்களும் கேட்டன. சில மணிநேரத்தில் எல்லோரும் அங்குமிங்கும் ஓடித்திரிந்தனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமே மோதல் நடந்தது. அனந்தம் வடலியில் கிட்டுமாமாவின்(யாழில் எல்லோரும் அவ்வாறே அழைப்பர்) பாசறை ஒன்று இருந்தது. அந்த பாசறையை முற்றுகையிடவே இராணுவ நடவடிக்கை நிகழ்ந்திருந்தது போலும்.
சன்னங்களின் சத்தங்கள் ஓய்ந்தன. ஆனால் சாவு ஓலம் கேட்டது. யாரையோ சுட்டுவிட்டனர் என்று தெரிந்தது. "இராணுவத்தோடு நேரடி மோதலில் ஒரு புலிவீரன் வீரமரணம் அடைந்தார். அக்களத்தில் இராணுவத்தினருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் போல அதற்குப் பழிவாங்கலாக இந்திரன் என்ற அப்பாவியையும் சுட்டுவிட்டுச் சென்றனர். அப்பாவி அவ்விளைஞனும் அரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடந்தான்" என்று பார்த்தவர்கள் கூறினார்கள். அச்சத்தால் நாங்கள் சென்று பார்க்கவில்லை. "திடீரென ஊர்தியில் வந்த புலிகள் விழுந்த வீரரை ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர்" என்று கூறினார்கள். இந்திரன் ஓர் அப்பாவி இளைஞன். அவன் உழைப்பிலேயே அவன் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல பொறுப்பான பையன். அவனை இழந்ததால் அக்குடும்பம் மேலும் வறுமைபட்டு வாழ்ந்தது.
புளியடி மூலைச் சுவரில் ஒட்டிக்கிடந்த சுவரொட்டியில் 'கார்த்திக்' வீரமரணம் என்று கிடந்தது. அவரே தான் அக்களத்தில் வீரச்சாவைத் தழுவியவராவார். ஓரிரு மாதங்கள் கழித்து புலிகள் காட்டிக்கொடுத்தவரை பிடித்து தண்டணை வழங்கினர். புலிகள் எதிரிகளை மன்னித்து விட்டாலும் காட்டிக்கொடுப்பவருக்கு தண்டனை கொடுக்காமல் விடார்.

ஆயினும்,

உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமையில்லை என்ற அறிவன்(புத்தன்) நெறியைப் பின்பற்றும் வரை இலங்கைக்கு மீட்சியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக