உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

மாவீரர் மாதம்

புலியுடை பூண்டு களத்திலே நின்று
வலியினைத் தாங்கி வரைந்திடும் கவிதை
கார்த்திகை மாதம் மாவீரர் சூடும்
கார்த்திகை பூவாய் கமகமக் கும்மே
ஆயினும் இன்றோ அவலமே சூழ்ந்து
பாயிரம் பாட முடியா மண்ணுக்காய்
ஆயிர மாயிரம் வீழ்ந்த நாயகர்க்காய்
வாயுரை யேனும் வழங்குதல் நன்றே
பிள்ளைகாள் கேளும் இளைஞர்காள் கேளும்
உள்ள முருகி ஒன்றான மக்காள்
ஒருமுறை எனது வலியையும்
பொறுமையாய் நின்று கேளும் கேளுமே!

ஒற்றைப் புலியாய் உறுதியின் வலிமையாய்ப்
பற்றைக் காடுகளில் பதுங்கி வாழ்ந்து
சிங்களப் படைஞரின் பாசறை நொருக்கி
வங்கம் சிலிர்க்க வாகை கொண்டு
எங்கும் இமைக்கும் விண்மீன் விசும்பில்
ஏறித் திரிந்து பகைவன் குகைக்குள்
சீறிப்பாய்ந்து செருக்கை இடித்துச்
செறுக்களம் வெல்லசீர்ப் படுத்திய தலைவனே!

நாங்கள் தமிழர் கோழை களாய்த்திரிய
நொந்து வெந்து நீறாப் போக
சொந்த மண்ணை இழந்து வாஅட
சூழுரைத்தான் சூரியத் தேவன்பிர பாகரனே!
நாளும் பொழுதும் தூக்கம் துறந்து
ஏலும் என்றோர் பலரை இணைத்துப்
போர்ப்பயிற் சியளித்து பெருவீர ராக்கி
சீறு மெரிகணை நடுவே நிறுத்தி
ஈட்டிய வெற்றிகள் எண்ணி லடங்கா
தீர்ந்து கிடக்கும் தீவுகள் தொட்டு
ஆர்ப்பரித் தோடும் மணலாறு வரையும்
வரிப்புலி வரைந்த தமிழீழ எல்லைக்குள்
வீறு கொண்டு வீரர்கள் நடந்தனரே!

ஒருவரைப் பாடவோ இருவரைப் பாடவோ
ஒவ்வொரு புலியும் ஒவ்வோர் வரலாறு
முள்வேலி அணைக்குள் அடங்காக் காட்டாறு
பல்லைக் காட்டிப் பசிதீர்க்கா புயற்காற்று
பெண்ணும் புலியாய்த் தோற்றம் பெற்றதும்
பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி யல்லவோ
கரிச்சட்டி தேய்க்கவும் குழந்தை சுமக்கவும்தன்
னுரிமை இழந்து முடமாய் வாழ்ந்தவள்
நஞ்சுக் குப்பியை கழுத்தில் சூடி
அஞ்சா நெஞ்சோடு சன்னக் கோர்வையை
சரிபார்த்துச் சுடுகுழல் இயக்கும் மறத்தியர்க்கோ
என்ன துணிவு எத்துணை வீரம்
அண்ணன் வளர்த்த அனல்குஞ்சு கல்லவோ
இரட்டைப் பின்னலை எடுப்பாய்க் கட்டி
இன்முகச் சிரிப்பில் இடரினைக் களைந்து
பன்முக ஆற்றலாய் பாரிலே தோற்றமாய்
பெத்த தாய்க்கும் போதிக்கும் மறைப்பெண்ணாய்
செத்தாலும் மண்ணுரிக்காய்ச் சாவேன் என்றுறுதியாய்
வாழ்ந்த வேங்கைகள் கண்டுதமிழ்த் தாயென்ன
ஞாலத் தாயுமும் தாள்பணிந்து கொண்டாளே!

திங்கள், 3 அக்டோபர், 2011

அண்ணல் திலீபன்


பாரதப் படைகள் கால்வைத் தநாளில்
ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எண்பத்தேழில்
ஆய்த பலத்தை ஒப்படைத் துவிட்டு
அறத்தின் வழியே புலிகள் நின்றனர்
பாரதப் படைகள் செய்தது என்ன?
நேருவின் பெயரன் செய்தது என்ன?
இந்திரா காங்கிரசு செய்தது என்ன?
இரத்தமும் இறப்புந்தான் தந்த தெமக்கு
நாங்கள் கேட்பது எங்க ளுரிமையை
யாங்கள் கேட்பது எங்களது மண்ணை
நாங்கள் கேட்பது எங்கள் ஆட்சியை
நீங்கள் கேட்டால் நியாய மாவது
யாங்கள் கேட்டால் பயங்கர வாதமோ?
என்னடா உலகம் என்னடா சட்டம்
கோடி மக்கள் திரண்டு அடித்தால்
ஓடிப் போகவேண்டும் என்பதோ நீதி
நடக்க இருக்க பாயில் கிடக்கநம்
நிலத்தில் குந்தி தென்றலை வாங்கி
நிலவைப் பார்த்து நிம்மதியில் பாடி
உலக மாந்தராய் நாமும் வாழ
வேண்டு முரிமை நமதினத் திற்கே
என்றார் தலைவ ரதுதான் உறுதி
இந்தியம் நினைத்ததோ இப்படி யல்லவோ
இருப்பது எதுவோ ஒன்றோ யிரண்டோ
இரண்டகரைக் கொண்டு அழித்து விடலாம்
இந்தியம் சொல்வதும் இதுதான் அல்லவோ
காதில் எமக்குக் பூவைச் சுத்த
கண்ணியத் தலைவன் இடமளிக் கவில்லை
அரியணை யெமக்கு வேண்டவே வேண்டா
அழிவுறு(ம்) மக்கள் உரிமை வேண்டும்
தலைவன் இலக்கை அறிந்த அண்ணல்
தம்மை இலக்காய் உருக்க வந்தார்
இந்தியத்தின் அடிவருடி களாய்க்கிடப் பதைவிட
சொந்தக் காலில் நிற்பதே மேலென்று
மான மொன்றே வாழ்வென வெண்ணிக்
காலை யந்த வேளை நல்லூரிலே
கடுந்தவ மொன்று தொடங்கிற்றுக் கண்டீர்
வாயில் நீரைக்கூட அருந்தாது கந்தன்
வாயிலில் புதிய வேள்வி நடந்தது
ஓரிரு நாள்க ளுருகி நோக
மிடறு வறண்டது குரலு மறுந்தது
உடலும் வெந்தது உயிருஞ் சுருண்டது
ஐயிரு நாள்கள் நம்திலீபன் வேட்கை
கண்டு மிந்தியம் காணாமல் நின்றது
எங்கள் பிள்ளை மேனி வாடியும்
தங்கள் தீர்வை திணித்ததே யிந்தியம்
பதினொரு நாளில் வயிற்றுப் புண்ணுடன்
பட்டினி கிடந்தே பிள்ளை வாடினான்
ஐயோ ஐயோ ஐயா திலீபன்
பன்னிரண்டாம் நாள்பிள்ளை பாடையிற் கிடந்தான்
ஓவொன் றுவானம் அழுதது போல்
ஓலமிட் டழுதன சாலை யெங்கும்
ஐயகோஒ ஒ.ஒ.ஒ.ஒ. ஒ.ஒ.ஒ.ஒ ஒ.ஒ.ஒ.ஒ.
இந்தியம் நம்பிக்கைத் துரோகம் செய்தது
எம்மினம் தம்மிடம் நம்பிக்கை கொண்டது
எத்தனை இடர்கள் வந்திட்ட போதும்
எத்தனை சிறைகள் எம்மை அடைத்தாலும்
எங்களின் தாயக ஓர்மம் அடங்காது
திலீபன் அன்று ஏற்றிய தீபம்
தமிழன் நெஞ்சில் என்றுமொ ளிரும்மே!
_ச.உதயன்_

வெள்ளி, 15 ஜூலை, 2011

நீண்ட வழித்தூது


நெகிளப் பந்துகளே
நெகிளப் பந்துகளே
நீண்டு நெடித்து
நீல வானிலே
நிமிர்ந்து செல்கிறீர்கள்
அசைந்து அசைந்து
செல்லுகையிலே
எங்கள் தேசியக் கொடியை
வானில் அங்கிகரித்துச்
செல்கிறீர்கள்
நீண்ட இலக்கு
நீண்ட நினைவு
நீண்ட போரும்
போராட்டமும்
நீண்டே தான்
போகிறது ஆயினும்
தளராதீர்கள்

புடைப்பான்களே
போகும் திசைகளில்
புயல் வந்து தடுக்கலாம்
அவ் வல்லாதிக்கங்களை
எப்படி வெல்வதென்ற
பாடநெறி தந்துள்ளோம்
வெல்வீகள் என்ற
நம்பிக்கை கொண்டுள்ளோம்
விண்வெளியில்
வெள்ளிகளாய் மின்னி
சிலர்
பூச்சாண்டி காட்டுவார்கள்
முகில்களாய்க் கூடி
இடியாய் நக்கலும்
செய்வார்கள்
மின்னல் பேச்சுக்களால்
உங்களில் படமும்
வரைவார்கள்
மாறி விடாதீரகள்
நாகரிகமுள்ள ஓர் இனத்தின்
நாயகர்கள் நீங்கள்
அவ்வளவு விரைவில்
மாறிவிடலாமா? என்ன?

தொடர்பற்றுப் போன பின்
நீண்ட காலமென்றும்
நெடுத்த பயணமென்றும்
கேட்க ஆளில்லை என்றும்
உங்களில் சிலர்
மாறக்கூடும்
விட்டு ஓடக்கூடும்
வேண்டாத விளையாட்டு
இதுவென்று விலகக்கூடும்
மாவீரரையும் மரணித்த
மக்களையும் எண்ணிக்கொண்டே
செல்லுங்கள்
தமிழீழம் விடுபடும்
தென்றல் வீசும்
நம்புங்கள்

காத்துப் பெட்டிகளே
கோடை வெயிலில்
போகும் திக்கில்
தனிவீட்டின் வெளிமாடத்தில்
கூடியிருந்து தேசியத்தின்
அக்கறை போல்
தேசியக் கொடி
மாற்றம் பற்றிப் பேசுவார்கள்
காறித்துப்பிவிட்டுச் செல்லுங்கள்

ஆண்டாண்டு காலமாய்
அரத்தஞ் சிந்தி சிந்தி
ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலையான (ஸ்)கொத்லாந்தைக்
கடக்கும் போழ்து
வாழ்த்துப் பெற்றுச்செல்லுங்கள்
அருகே,
காட்டிக் கொடுத்து
காட்டிக் கொடுத்து
வாழமுடியாமல் இன்னும்
போராடும் அயர்லாந்து
பக்கம் செல்லாதீரக்ள்

அங்கே தான் அங்கேதான்
கொடுங்கோலரைத் தங்ககதில்
தங்கவிடாது விரட்டியடித்த
மானத் தமிழ்மாந்தர்
தாயக வேட்கையோடு
அதே மண்ணில் தான்
தமிழினப் படுகொலையை
உலகுக்குக் காட்டிய
ஒளியலை (4)நான்கும்
கையெடுத்து கும்பிடுங்கள்
எங்கள்
நம்பிக்கை ஒளி

இங்கிலாந்தைத் தாண்டவும்
இரண்டாம் உலகப்போரில்
இடியுண்டு போன
இனங்களையும் புதிதாய்த்
தோன்றிய நாடுகளையும்
காண்பீர்கள்....
பாலை தாண்டவும்
பாதிக் களைப்பு
வந்துவிடும்
முடிச்சை அவிழ்த்து
மூச்சை எறியலாம் என்றும்
எண்ணம் வரும்
இது நம் பிறங்கடைகளின்
எதிர்காலத்தை உருவாக்குவதற்கான
உழைப்பு ஏன் களைப்பு
ஓரிருவராயினும் ஒருங்கிணைந்து
செல்வோம் என்ற உறுதியோடு
செல்லுங்கள்

எம் குழந்தைகளையும்
குடும்பித்தினரையும்
கொட்டக் கூடாத குண்டெல்லாம்
கொடுத்து இனமழித்த இந்தியம்
காந்தியத்தின் பொய்யும்
கொண்ட நாட்டையும்
கடந்தால் அப்பால்
ஒரு தீவு
இரு வேறு வாழ்வாதாரம்
என்றுமே சேராது
சேரவே சேராது
இருநாடு என்பதே
அமைதி வேண்டும் தீர்வு
அந்த அமைதியின் வரவுக்காய்
அழுகுரலின் நடுவே
ஒரு தமிழ்ப்பிஞ்சு
அதன் இருகைகளிலும்
சேருங்கள் சொல்லுங்கள்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ச.உதயன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அண்ணையின் அன்னைக்கு

பாராண்ட இனமொன்று
......பரித்தவித்த வேளையிலே
பாராள வேண்டுமென்று
......பெருமகனைக் கொடுத்தனையே
தானாள வேண்டுமென்று
.......ஒருபோதும் நினைத்ததில்லை
தமிழாள வேண்டுமென்றே
.......தம்பியரும் நினைக்கின்றார்
சீராளன், சீராளன் சினந்தாலோ
.......சிங்களத்தான் படையுடையும்
ஆனாலும் தாயே
.......அவன்வாயால் "அம்மே"
என்றழுதாலோ அவனுக்கும்
.......உயிர்ப் பிச்சை
அளிக்கின்ற வீரம்
.......அவனெல்லவோ மறவன்.

அம்மகனை ஈன்றெடுத்தாய்
.......அதுவே நற்பேறே
வம்பனாய் தும்புக்குப்
......போனதுமில்லை போக்கிரியாய்
சண்டைசச்சரவு செய்ததோயில்லை
.....தமிழர் நோவதைக்
கண்டவுடனே களத்தில்
.....குதித்தான் வீரர்மரபாய்
ஆயினும் இரண்டகன்
.....பஸ்ரியாம் பிள்ளை
கடைக்குட்டி யவனையொருநாள்
..... கம்பியெண்ண வைப்பனென்பான்
முடிந்தால்நீயும் பிடியேன்
........அதற்கு முன்பே உன்னையவனும்
பிளந்து போடுவான் என்பாய்
..........அன்னையேயுன் பேச்சில்
தமிழ்த்தாய் பூரித்தாள்
......நீயின்றிஆரோ தமிழ்த்தாய்

வாசகசாலைக் குற்றியிலே
.....வரிசையாய் இருந்து
நகைச்சுவை சொல்லி
....நாள்கழித்த கூட்டத்திற்குத்
தெரியாது தாயே
.....போராட்டத்தின் வலி
குண்டுக்கும் நடுவில்
......குப்பிக்கும் அருகில்
மண்மூட்டைக்கும் இடையில்
.....பார்வல் இருக்கையில்
இருந்தானுக்குத் தானே
....தெரியும் விழுப்புண்ணின்
வேதனையும் தாகமும்
........விடுதலையின் பண்ணும்
முப்பதாண்டுகள் மண்டையுடைந்து
.......முக்கிமுக்கி முடியாதென்று
முப்பஃது நாடுகளைக்
......கூவி அழைத்து
மக்களை எல்லாம்
.....நரபலி ஆக்கி
இராசபட்சிகள் வென்றோவிட்டன
.....ஒருபோதுமில்லை வெல்வோம்

சனி, 19 பிப்ரவரி, 2011

மாவீரன் முத்துக் குமரனுக்கே

ஈழத்து மக்கள் இழந்ததை மீட்கவே
ஈனப் பிறவிகள் இருப்பிடம் துரத்தவே
மீளாத் துயரில் மனதது உறுத்தவே
மீட்க வந்தனன் முத்துக் குமரனே

அண்ணா சிலையும் ஆடுமாப் போல
கண்ணாடிக் குருடன் ஆளும் நாட்டிலே
கருணாக் கும்பல்கள் கத்தி வாளோடு
அரக்கம் ஆடியதோ முத்துக் குமரனே

அகிம்சை வழியிலே ஆய்தம் தரிக்காது
மகிந்தா கருணா கொடுங்கோல் சாய்க்கவே
அகிலம் தழைக்கவே அமைதி பிறக்கவே
அகலாய் ஒளிர்கின்றனை முத்துக் குமரனே

அறுக்க வறுக்கவே அறுகும் வேர்விடும்
அறுக்கும் அடிவாழை தழைத்தே நிமிரும்
பொறுப்போம் பொறுப்போம் பொறுமை இழக்காது
பொறுத்தார் புவியாள்வார் முத்துக் குமரனே

தீயிலே வேகினை தேகம் கருக்கினை
தோய்ந்து அரத்தத்திலே தேகம் சரித்தனை
ஆயினு மேறுவோம் புலியணை நாளையேநம்
பாயிர வாழ்த்திலும் முத்துக் குமரனே

_ச.உதயன்.

சனி, 29 ஜனவரி, 2011

குற்றத்தாளிகை

கொத்துக் குண்டுகளும் கொத்தணிக் குண்டுகளும் நச்சுக்குண்டுகளும் நாசிக்குண்டுகளும் அடுக்கடுக்காய்க் கொட்டி குழந்தைகளையும் குடும்பங்களையும் ஏன் இனத்தையே கொன்று குவித்த பின்னரும் பெண்கள் மீதான வன்புணர்வுகள் இளையவர்களை கொத்தியும் வெட்டியும் சுட்டும் கொன்ற பிற்பாடு தமிழரின் வரலாற்று அடையாளங்களை இல்லாதொழித்த பிற்பாடு. மூவிலக்க மக்களை சிறைப்படுத்திய பிற்பாடு சிறையிருக்கும் உறவுகள் பேசிக்கொள்ளும் போழ்து. இது தான் நடக்குமென்று வன்னி போர்மக்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் உரையாடலும் அதுவே........?

தமிழரசி:) அடி தமிழ், போர் முடிந்தாச்சு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் பாடு இன்னும் சிறைக்கூடத்தில் தானடி கழியுது.

தமிழினி:) அக்கா நாங்கள் எவ்வளவு பாடுபட்டும் எங்கட சனம் உரிமைப்போரை விளங்கிக்கொள்ளவில்லையோ?

தமிழரசி:) அறிவு சார்ந்த எம்மவர்களை தான் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அவர்களே விடுதலைப்புலிகள் தவறிவிட்டனர் என்று நெருப்பையள்ளி கொட்டுகிறார்கள்.

தமிழினி:) தலைவர் சற்று இறங்கி நோர்வே சொன்னது போல செய்து இருக்கலாமா?

தமிழரசி:) தயவு செய்து நோர்வேயைப்பற்றி பேசாதடி;நோர்வே தான் இப்பொழுது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டாத்தைப் பற்றி சரியாக உலகத்துக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.நோர்வே எரிந்த வீட்டில் எடுத்ததெல்லாம் நயம் என்று நடந்து கொள்கிறது.

தமிழினி: நோர்வேயும் ஏமாற்றிவிட்டதா அக்கா!

தமிழரசி:)ஓமடி, பாதுகாப்பில்லாத போது நோர்வே ஏன் சொன்னது? வெள்ளைக்கொடியோடு வாருங்கோவென்று. நடேசன் , புலித்தேவன் அண்ணை உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட அரசியல் போராளிகளை அரசப் படைகள் கொல்வதற்கு நோர்வேதான் கரணியம். அது மட்டுமல்லடி அமைதிப் பேச்சை சிறிலங்காவரசு எப்படி உடைத்தது என்ற ஆவணத்தை தமிழ்ச்செல்வன் அண்ணையாக்கள் ஒப்படைத்துள்ளனரென்று தமிழ்ச்செல்வன் அண்ணையே என்னிடம் கூறியுள்ளார்.

தமிழினி:) அப்படியா? நோர்வே அதைப்பற்றிப் பேசாமல் வேறு பேசிக்கொண்டு தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதுதா?

தமிழரசி:) ஆமாம்.இலங்கா அரசு தலைவர் இராசபட்சேவை தப்பிக்க வைத்துக்கொண்டிருக்கும் நாடுகள் தம் ஆதாயத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

தமிழினி:) சரியக்கா, நாடுகளை விடுங்கோ நம்மட சனங்களும் ஏன் அந்த நாடுகளோடு சேர்ந்து இனத்தைக் கேலி செய்கிறார்கள்.

தமிழரசி:) புலிகளாகிய எங்கள் மீதுள்ள சினத்தை வைத்து தாம் வாழப்பார்கின்றனர். இனி இயலாது என்ற அவ நம்பிக்கையில் அலுத்துக்கொள்கின்றனர். காலநீட்சியில் கவலை கொள்கின்றனர்.

தமிழினி:) இனித் தமிழ்மக்களென்ன செய்யலாம்?

தமிழரசி:) முதலில் இருக்கைகளை விட்டு முதல் தலைமுறையினர் எழுந்து அடுத்த தலைமுறையிடம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய நிதி உதவிகளைக் கொடுத்து உலகெங்கு போர்க்குற்ற வாளிகளுகு எதிராக உலக நாடுகளில் காலந்தாழ்த்தாது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதை அடுத்த தலைமுறையினரே செய்யவும் வேண்டும்.

தமிழினி:) உலக நாடேங்குமா?

தமிழரசி:) தமிழருக்கு அமைதியேற்படுத்தித் தருவதாய் ஏமாற்றிய நாடுகளில் முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உலக அறமன்றம், அமெரிக்கா,நோர்வே, நெதர்லாந்து, தென்மார்க், இவற்றோடு ஐரோப்பிய நாடுகளில் முதல் ஏற்பாடாக மக்கள் பொதுஅமைப்புகள் தமிழ்ச்சங்கங்கள் மக்கள் அவையினர் இளையோர் அமைப்புகள் ஒன்ருபட்டு செயற்பட வேண்டும்

தமிழினி:) அங்கெல்லாம் வழக்குகள் தோற்றால் பணம் வீணாகும் அல்லவா?

தமிழரசி:) நாம் எத்தைனையோ இழந்தோம். புலம்பெயர் மக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தோற்றாலும் அவற்றை வைத்து வாதாடுவதற்கு எங்களுக்கு வாய்ப்புண்டு. அதனால் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வழக்குத் தாக்கல் செய்யதால் பிற்காலத்தில் நன்மையுண்டு என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழினி:) சரியக்கா அரசு ஏன் இப்பொழுது ஈ.பி.டி.பி யை ஒதுக்குகிறது.

தமிழரசி:) கடிநாயை விட காவல் நாய் உதவுமே என்றுதான்.....

தமிழினி:) புரியவில்லை அக்கா.

தமிழரசி:)அடியே தோழி இடக்லசை விட கூட்டமைப்பு உதவுமென்றேதான். இருந்தால் பாரேன் கூட்டமைப்போட விளையாட்டை................?

தமிழினி:) இலங்கா அரசு உலகெங்கும் தங்கட இராணுவத் தளபதிகளை அனுப்புவதற்கு கரணியம் என்ன அக்கா?

தமிழரசி:) உலகத்திலேயே பெரிய பயங்கர வாதிகளை அழித்து விட்டதாய் உலக இராணுவப் பின்னலை வலுப்படுத்துவற்கும். தமிழ் ஆயுதக் குழுக்ழோடு உறவைத் தேடிக்கொண்டு தமிழ்மக்களின் போராட்டங்களைத் தடுக்கவும். உள்நாட்டு தள்பதிகள் மோதலைக் குறைக்கவும். போர்க்குற்றவாளிகள் நற்பெயரெடுக்கவும் தான்.

தமிழினி:) தமிழ்மக்கள் எப்படி தமக்குரியதாய் மாற்ற முடியும்.

தமிழரசி:) மக்கள் பொது அமைப்புகளோடு சேர்ந்து முதலில் அக்குற்றவளிகளுக்கு எதிராக; அதன் பின்பு அவர்களை செய்யச்சொன்ன அரசுக்கு எதிராக;அதன்பின்பு இலங்கா அரசுக்கு எதிராக குற்ற வழக்கைத் தொடரவும் வேண்டும்.

தமிழினி:)அப்படிச்செய்தால் தனிநாடு கிடைத்து விடுமா?

தமிழரசி:) இலங்கா அரசுகள் செய்தது இனப்படுகொலை இதன் பின்னணியில் இருந்தது இந்தியா. அதை கோத்தபாயா அடிக்கடி பதிவு செய்திருக்கிறார். ஒளிக்காட்சிகள்,ஒலிபேழைகள்களின் ஆதாரங்கள் உள்ளன. ஒரு தேசியத்துக்கெதிராக நடத்தப்பட்ட அப்பட்டமான படுகொலைகள்.

தமிழினி:) தமிழீழம் கிடைகவேண்டும் அக்கா, அப்பத் தான் இந்த இனம் மீளும்.அதுசரியக்கா எங்களைப்பற்றி அதாவது தமிழ்மக்களைப்பற்றி அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது.

தமிழரசி:)அதுவெல்லாம் அமெரிக்காவின் நடிப்பு. புதுவை அவர்கள் அன்றே அமெரிக்காவின் நிலைப்பாட்டை தனது கவிதையில் வடித்துள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் முன்னுக்குப் பின் எதிரியும் நண்பனும், இது இலங்கா ஆட்சியாளருக்குக் கொண்டாட்டம் எம்மக்களுக்குத் திண்டாட்டம் இவர்கள் எமக்குதவார். நம் புலம்பெயர் சொந்தங்கள்தான் வல்லரசுகளின் வாய்ச்சொல்லில் சிக்காது மூச்சோடு செயற்படவும் வேண்டும்???????????

யாவும் கற்பனை

சனி, 15 ஜனவரி, 2011

வள்ளுவராண்டு சுறவம் ௨ய௪௨ (2042)


நாம் இன்று பொங்கலை அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் முன்றலில் பொங்கினோம். தமிழீழத்தின் கிழக்கு தண்ணீரில் மூழ்கிக் கிடக்க இப்பொங்கல் தேவையா? என்ற கேள்வியை அறிவு சார்ந்தோர் எழுப்பியிருந்தனர். ஆனாலும் புலம் பெயந்த நாடுகளில் வாழும் எம்குழந்தைகளுக்கு தைப்பொங்கல் செய்வதை ஒரு செய்முறையாகக் காட்டவே தமிழ்க்கலைக்கூடம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோர் பலர் தண்ணீரில் மிதக்கும் நம் தாயகத்திற்கு உதவியும் செய்து கொண்டிருந்தனர்.
பிள்ளைகள் பலர் தைப்பொங்கல் பற்றிக் கவிதைகள் , கட்டுரைகள் எழுதுவதற்காக நேரில் வந்து பார்த்து பூரிப்படைந்தனர்.கடுங்குளிர் சூழ்ந்த பனிகொட்டும் வேளையும் நாம் பொங்கலைப் பொங்கினோம். கோலமிட்டு தென்னங்குருத்தினால் தோரங்கள் கட்டி மிகச்சிறப்பாக புதுப்பனையிலே பொங்கலைப் பொங்கினோம்.
பொங்கி முடிந்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் அனைவரும் பொங்கலை உண்டோம். நன்றி செலுத்தும் இந்நாளிலே அனைவரும் நன்றி உணர்வோடு தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.நானும் என் நண்பர்களுக்கும் கலைக்கூட ஆசிரியர்களுக்கும் வாழ்த்தைத் தெரிவித்தேன்.



_ச.உதயன்_

சனி, 8 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

காளை மாடுகள் ஏர்பூட்டி
காலை மாலையும் மண்புரட்டி
சேற்றில் நின்றுதான் நாற்றிறுக்கி
சேர்ப்பார் மூட்டையில் நல்மணியே!

பொங்கல் பொங்கிட நல்மணிகள்
எங்கும் வீட்டினுள் காத்திருக்கும்
கங்குல் சூழ்ந்த முற்றத்தில்
பொங்கல் வேலைகள் தொடங்கிடுமே!

வாழை தோரணம் கரும்புடனே
நாலாய்ப் பக்கமும் அலங்கரித்து
கோலம் மாவினால் போட்டுவைக்க
காலை யாதவன் வருவானே!

வந்த ஆதவன் மகிழ்ந்திருக்க
சிந்தும் வெள்ளொளி பயனாக
பொங்க வாயிலே பால்திரண்டு
பொங்கல் பொங்குவோம் தமிழினமே!

பொங்கலோ பொங்கல்

_ச.உதயன்_

சனி, 1 ஜனவரி, 2011

௨ய௪௧

ச.உதயன்:)
கங்குல் படர்ந்த கடுங்குளிர் தன்னிலே
செங்கனல் கக்கிய சீர்வாணம் - எங்கு
மொளியை பரப்பியது போன்ம்தமிழர் பொங்கும்
மொழிப்பகை வீழ்த்துவார் காண்

அருள்சீலன்.கரிசன்:)
கலப்பனதான் கலந்தால் ஓர்பெயரே கலக்காவாம்
விலக்கென்ற பின்விளையின் இழிபெயரே -முலைப்பாலில்
கஞ்சியினைக் கலப்பின் முலைப்பாலே பாலோ
நஞ்சினையே நாம் கலந்தபின்?

ச.உதயன்:)
தங்கமே தாரகையே பொய்கையே பேரொளியே
எங்குமே பொங்கியெழும் வாரியே - மங்குவாளோ
எங்கள் தமிழ்மொழித் தாய்