உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பொள்ளாச்சிக்காய் கொச்சகக் கலி

ஆட்சியோ பொள்ளாச்சி வாட்டமோ அண்டாது;
கூட்டமோ தெங்குபோல் தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ ப‌த்திமுத்தி விட்டிலைப் பேணும‌ந்த‌;
பாட்டாளி ம‌ண்ணைநீயிர் பாருங்காள் ந‌ண்ப‌ரே"

நன்றியன்பன் _ச.உதயன்.


ச.உதயன்:)
வசிட்டரே குட்டித் திருத்த வேண்டுகிறேன். இப்பாடல் சரியா? பிழையா?

இராஜ. தியாகராஜன்:)
நண்பரே! நான் வசிட்டனோ, நீங்கள் கௌசிகனோ அல்ல. பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம்தான். உங்கள் பா எவ்வகையான கட்டமைப்பு என்று கூறுங்கள். பின்னர் அதிலிருக்கும் அமைப்பினை சரிபார்த்துச் சொல்கிறேன். மற்றபடி பொதுவாக வெண்கலிப்பா/கலிவெண்பா எனில் ஈற்றடி சிந்தடியாக வரவேண்டும். இது எல்லாமே அளவடிகளால் வந்தது.

கொச்சகக் கலிப்பா என்று கொள்ளலாம்.:

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டாது வாட்டமும்;
கூட்டமோ தெங்குபோல்; தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைப் பேணுமந்த,
பாட்டாளி மண்ணையே பாருங்காள் நண்பரே!

மாற்றங்களின் விவரம்:
ஆட்சி - அண்டா = பொழிப்பு மோனைத் தொடைக்காக
மண்ணைநீயிர் = முதலில் எனக்கு அதன் பொருள் வேண்டும். இரண்டாவது கலிப்பாவிலோ/ வெண்பாவிலோ விளாங்காய் சீர்களை இலக்கியங்களில் காணமுடியவில்லை ஓசைநயம் கெடுகின்றதென்பதால். விளாங்காய்சீர் = காய்ச்சீர்களில் நடுவில் குறில்+நெடில் இணைந்த நிரையசை வருதல். திருப்புகழ் போன்றவைகளில் கடைசியில் வரும் தொங்கல்களில் மட்டும் பார்க்கிறேன்.

ச.உதயன் :)நீங்கள் திருத்திய படியே தான் பாடல் அமைய வேண்டும்.நீங்கள் திருத்தியது மிகச்சரியே.மேலும் திருத்தலாமா "விட்டிலைக் காக்குமந்த" என்று திருத்தினால் சரியாகுமா?
எனக்கு பாவகை இன்னும் புரியவில்லை. பொள்ளாச்சி மண்ணைக் கேள்வியுற்ற வரை எழுதினேன்.ஆசானின் மறுமொழி மடலுக்கு நன்றி.மண்ணை நீயிர் என்றே எண்ணியெழுதினேன்.
மீண்டும் பாடலைத் தந்தேன்.சரியெனில் அதை பொள்ளாச்சி மண்ணுக்காய் வைத்துக்கொள்வேன்.

பொருளாச்சி(பொள்ளாச்சி) மண்ணுக்காய்.

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டாதே வாட்டமும்;
கூட்டமோ தெங்குபோல்; தோப்பெனக் கூடிநிற்கும்;
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைக் காக்குமந்த,
பாட்டாளி மண்ணையே பாருங்காள் நண்பரே!

இராஜ. தியாகராஜன்:)நண்பரே உங்கள் கருத்து சரியே! இனி கலிப்பாவின் துள்ளல் ஓசை நயத்துக்காய், ( என்னால் தெங்குபோல், பத்திமுத்தி என்ற சொற்களை மாற்ற இயலவில்லை - பொருள் நயம் கெடுமோ என்ற அச்சம்)

முதலடி - கூவிளம்+தேமாங்காய்+கூவிளம்+கூவிளம்

இதைப்போல் அனைத்து அடிகளும் அமைந்தால் இயல்தரவிணை கொச்சகக் கலிப்பா.

இல்லாவிடில் கொச்சகக் கலிப்பா.
சில விவரங்கள் நேரீற்றியற் சீரும் (நேர் ஈற்று இயற்சீர்) (தேமா, புளிமா எனும் மாச்சீர்கள்) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி எனும் சீர்கள்) கலிப்பாவில் வாரா. இவையொழிந்த எல்லாச் சீர்களும் கலிப்பாவில் வரும். கலித்தளையுடன் பிற தளைகளும் கலிப்பாவில் மயங்கி வரும்.

ஆட்சியோ பொள்ளாச்சி அண்டுமோ வாட்டமும்
கூட்டமோ தெங்குபோல் தோப்பென கூடியே
வீட்டிலோ பத்திமுத்தி விட்டிலைக் காத்திடும்
பாட்டாளி மண்ணுக்காய் பாருங்கள் நண்பரே

(பாடல் வளமாகத் திருத்தியவர் ஆசான் இராஜ.தியாகராஜன்).
_ச.உதயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக