உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

காக்கை தூக்கிய கோழிக்குஞ்சு!

ஒரு நாள் பெருத்த கூச்சல். காக்கையொன்று அயல் வீட்டு கோழிக்குஞ்சை தூக்கிற்று. குஞ்சோ கீச்...கீச்...கீச் என்று கத்தும் ஒலி எங்கள் எல்லோரையும் பரபரக்கச் செய்தது. அந்தக் காக்கை எங்கள் வீட்டின் வழியாகப் பறந்து வந்து பூவரசு மரத்தில் இருந்து வாயில் இருந்த குஞ்சைத் தின்பதற்கு அணியமானது. குஞ்சோ கத்தியது; தம்பி எனக்கு இளையன் விட்டானா காக்கையை விடவில்லை. குஞ்சை காக்கையிடமிருந்து மீட்டுவிட்டான். குஞ்சை மீட்டதும் உரிய வீட்டாரிடம் கொடுத்தான். "காக்கை கொன்று தின்றிருக்கும் காப்பாற்றிய உங்களிடமே குஞ்சு இருக்கட்டும்" என்று கொடுத்துவிட்டனர்.

அவனும் அதை அன்போடு வீட்டுக்குக் கொண்டுவந்தான். அவனோடு தான் அந்தக் குஞ்சு வளர்ந்தது.விடலை பருவம் அடைந்தது. கூவவும் தொடங்கிற்று. "நான் காப்பாற்றிய குஞ்சு விடலைச் சேவலாய் கூவுகிறது" என்று கூறி மகிழ்வான் தம்பி. அந்தச் சேவல் குஞ்சாய் இருக்கும் போது தாய்க்கோழியின் சூட்டை அறிந்ததில்லை. தம்பியின் கைச்சூடுதான் அதற்குத் தெரியும். யானும் தங்கையும் சேர்ந்து அக்குஞ்சுக்குப் பரிவுகாட்டி வந்தோம். அதனால் நாங்கள் கையை அதனருகில் கொண்டுசென்றால் அது இருந்து விடும். நாமும் பிடித்து கன்னத்தில் வைத்து கொஞ்டுவோம்.விடலைச் சேவலுக்குரிய அத்தனை அழகும் கொண்டது.
வளர்த்த தம்பியும் தாயக விடிவுக்காய் தன்னை இயக்கத்துக்கு ஒப்படைத்து விட்டான். அவன் விடுமுறைக்குத் தான் வருவான். அவன் இலக்கு முழுவதும் விடிவென்றே இருந்தது.

நிற்க,
வளர்ந்த விடலைச் சேவலை கறியாக்க அப்பாவுக்கு விருப்பமில்லை நாம் அந்த சேவல் மேல் வைத்த பரிவைக் கண்டிருந்தார்.ஆனால் அதை யாருக்கோ விற்க முடிவுசெய்தார். சேவலைப் பிடித்துத் தரும்படி என்னிடம் கேட்டார். நான் பிடித்துக் கொடுக்க மறுத்துவிட்டேன். தங்கைக் கேட்டு பிடித்துக் கொண்டுபோனார். தங்கைக்கு அறியா அகவை அன்றிலிருந்து அப்பாமேல் சிறிய முரண்பாடு. அச்சேவலை தெரிந்த நண்பருக்குக் கொடுத்து அவர் அதை கறியாக்கி உண்டதை சுவைபடச் சொன்னார். நானோ அந்த சேவலை நினைத்து மனம் வேகினேன்.

வீட்டுப் பிள்ளைகள் போல் வளர்க்கும் உயிரினங்களைக் கொல்லாதீர். பரிவு காட்டாவிட்டாலும் தீங்கு செய்யாமல் இருப்பீர்.

_ச.உதயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக