உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 25 செப்டம்பர், 2010

மலையும் மடுவும்

ச.உதயன்:)

தமிழ் நலங்காக்கும் முனைவர் அவர்களுக்கு,
நாங்கள் ஏதோ இருக்கிறோம். உங்கள் நலம் எப்படி ஐயா? தமிழ் நலமும்
தங்களோடல்லவா இருக்கிறது. உச்சந்தலையில் பனிக்கட்டி வைக்கவில்லை. பாவாணர்
வழி வந்த பேராளர் அல்லவா! உங்கள் தமிழ் நூல்கள் சிலவற்றை வாசித்து
பூரித்திருகிறேன். பாவாணரின் பைந்தமிழை நோர்வேயில் பறைசாற்றி வருகிறேன்.
உங்கள் துணையும் கிட்டிவிட்டால் இலக்கில் வெற்றி கிட்டும்.தயவு செய்து
மின்மடலோடு தொடுப்பில் இணைவீர்களா?
நன்றியுள்ள மாணவன்.
ச.உதயன்.

முனைவர் அரசேந்திரன்:)

அன்புள்ள தம்பி வணக்கம்.


தங்கள் கடிதத்திற்கு நன்றி.நெடுநாட்களாகத் தங்கள் கடிதத்தைக் காணமால் இருந்துவிட்டேன்.நீங்கள் மலேசியாவில் என்னைச் சந்தித்தீர்களா? என் மின்னஞசல் முகவரி அப்பொழுது கொடுத்தேனா .என் நூல்களில் உலகம் பரவிய தமிழின் வேர்- கல் பகுதி நான்கும் தங்களிடம் உள்ளதா? மிகவும் முதன்மையான நூல்கள் இவை. தமிழறிவோம் தமிழறிவோம் பகுதி 1 மற்றும் 2 தமிழ்க்கப்பல் என்பனவும் குறிப்பிடத்தக்கன. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் ஆய்ந்து கொடுத்துள்ள தமிழ் வடஇந்திய மொழிகள் பகுதி௧ ஓர் ஆய்வுச்சிகரமாகும். இன்னும் இது நூலாக அச்சில் வெளிவரவில்லை. இதுவரை செய்தவற்றினுள் இன்னும் பல மடங்கு நூல்கள் வெளிவரவேண்டும். தமிழால் தழைத்த சிங்களம் நூல் அண்ணாவால் வழிகாட்டப்பட்டு எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் நூல். ஆயிரம் ஆயிரம் கனவுகளும் கடந்த ஓராண்டாக நொறுங்கிக் கிடக்கின்றன. காலம் மாறினால்தான் நம் பணிகளை நிறைவுடன் செய்யமுடியும். தங்களைப் போன்ற தம்பிகளின் நல்அன்பு சிறிது ஊக்கத்தை எனக்குத்தருகின்றது. என் நூல்களைக் கற்று அவற்றில் காணப்படும் தமிழின் சிறப்பை தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

ச.உதயன்:)

முனைவர் அரசேந்திரன் ஐயாவுக்கு,
யான் மீண்டும் அன்புவணக்கத்தை மிடுக்கோடு தெரிவிக்கிறேன். ஏனெனில் நுங்கள் தொடர்பு கிடைக்குமா கிடைக்குமா என்று இவ்வளவு நாளும் ஏங்கிக்கிடந்தேன் இன்று அக்குறை தீர்ந்தது. இன்று என்மகன் பாவலன் பிறந்தநாள். அகவை ஏழு இன்று நிரம்பியது. இந்நாளில் உங்கள் மின்மடலும் கிடைத்தது. எவ்வளவு மகிழ்வு தெரியுமா!
ஐயாவோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டது ஆனால் தொடர்ந்து தொடுப்பில் இருப்பீர்களா? பாவாணர் ஆய்வு நூல்களுக்குப் பின் உங்கள் ஆய்வு நூல்கள் அவருடைய சறுகல் நிலையை நிமித்துவதை உவப்போடு வாசித்திருக்கிறேன். எத்தனை நூல்கள் எழுதினாலும் அத்தனை நூல்களும் எனக்கு வேண்டும். அத்தோடு நோர்வே(நார்வே) நாட்டு மொழிப் பலுக்கலும் சொற்களும் தமிழுக்கு நகலாக உள்ளன நோர்வே நாட்டு மொழியையும் ஆய்வு செய்து தமிழின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றவேண்டும். அதை உங்களால் தான் முடியும். நூல்களை நீங்கள் எழுதுங்கள் நூல்களுக்கான படிகளைத் தந்து நூல்களை வெளியிடுவோம். உங்களுக்கு உறுதிமொழி வழங்குகிறேன். நோர்வேயில் இயங்கி வரும் ஒலிவிளம்பியான தமிழ்முரசத்தில் 'நாற்றுமேடை' என்ற நிகழ்ச்சியை நடாத்தி வருகிறேன். பாவாணர் நூல்களும் அரசேந்திரனாகிய உங்கள் நூல்களுமே கருவிநூல்களாக உள்ளன.
தமிழறிவோம்
தமிழறிவோம் தொகுதி 2
தமிழ்க்கப்பல்
இன்னும் நீங்கள் யாத்த கட்டுரை நூல்கள் வேண்டும். அவற்றை எப்படிப் பெறுவதென்று அறியத் தாருங்கள் ஐயா. உடனே அவற்றுக்கான படிகளை அனுப்பிவைக்கிறேன்.
உங்கள் தொடர்புக்காய் ஏங்கிகிடந்த போது மலைய நண்பர் தாம் தந்தார்.நிறைந்தது சிந்தை.
நன்றியன்பன்,
மாணவன்.
ச.உதயன்
(தாயம் தமிழீழம் வாழிடம் நோர்வே)

வாழ்க தமி வளர்க தமிழர் வாழிய வாழிய தமிழ்நாடும் தமிழீழமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக